இந்தோனேசியாவில் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைப்பு - 3 பேர் உயிரிழப்பு

30 ஆவணி 2025 சனி 16:29 | பார்வைகள் : 1741
இந்தோனேசியாவில் நடைபெற்ற போராட்டத்தில் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்துடன் கூடுதலாக, வீட்டு வசதிக்காக 3,000 டொலர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல், இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இந்த போராட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முன்னிலையில், காவல்துறையின் கவச வாகனம் ஒன்று, இரு சக்கர வாகனத்தில் சென்ற டெலிவரி ஊழியர் Affan Kurniawan என்பவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபாவோ, உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
காவல்துறை வாகனம் மோதி, அவர் உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.
இதில் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகர் மக்காசரில் நடைபெற்ற போராட்டத்தில், அங்குள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், மேற்கு ஜாவாவின் பண்டுங் நகரிலும் போராட்டக்காரர்கள் பிராந்திய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளனர்.
அதை தொடர்ந்து, இந்தோனேசியாவின் 2வது பெரிய நகரான சுரபாயவில் காவல்துறை தலைமையகத்தின் உள்ளே நுழைந்து வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.
காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், போராட்டக்காரர்களை கலைத்தனர்.