டிரம்ப் வரி மிரட்டலுக்கு அடி பணிய வேண்டியதில்லை: சசிதரூர்: பலர் உண்டு நமக்கு!

1 ஆவணி 2025 வெள்ளி 04:53 | பார்வைகள் : 207
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக, 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், ''இந்த வரி மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய அவசியமே இல்லை,'' என ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார் காங்., - எம்.பி., சசி தரூர். ''வர்த்தகத்திற்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை; பல நாடுகள் நமக்காக இருக்கின்றன,'' என அவர் கூறியுள்ளார். மேலும், ''எங்கள் நாட்டு அரசு, வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு கோமாளியிடம் சிக்கியுள்ளது,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்துள்ளார். 'இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கும் டிரம்ப் நமக்கு அபராதம் விதித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் என பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், ''அமெரிக்காவின் இந்த பொருளாதார மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிய வேண்டிய அவசியமே இல்லை,'' என காங்., - எம்.பி., சசி தரூர் தெளிவா க கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க அதிபர் டிரம்ப், 25 சதவீத வரியை இந்தியாவுக்கு விதித்திருக்கிறார். தற்போது டிரம்ப், பாகிஸ் தானுக்கு சாதகமாக செயல்பட துவங்கி விட்டார்.
உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது.
இதனால் வர்த்தக தடை ஏற்படுவதாகவும் அவர் விமர்சிப்பது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களுக்கு நிச்சயம் பொருந்தாது. ரஷ்யாவுடன் இருக்கும் நீண்டகால நட்புறவை பலவீனப்படுத்தவே, அதிபர் டிரம்ப் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பு என்பது ஆழமான தேச நலனை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக எரிபொருள் மற்றும் ராணுவ துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.
இந்த நட்பு என்பது பிற நாடுகளை மிரட்டுவதற்காக அமைந்தது அல்ல. உலகளாவிய அரசியல் விவகாரங்களில் இருந்து இந்தியாவை தள்ளி வைக்க முயல்வது, இந்தியாவின் தன்னாட்சி மற்றும் சுயமாக முடிவெடுக்கும் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும்.
அமெரிக்காவின், 25 சதவீத வரி விதிப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக இந்தியா அடிபணிந்து விடக் கூடாது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வு, 7.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்திய ஏற்றுமதிக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி துறையில் போட்டியாக இருக்கும் வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளை விட, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி சற்று அதிகமானது தான். இது பாகிஸ்தானுக்கு சாதகம் செய்வது போன்றது.
ரத்தினங்கள், நகை, ஸ்டீல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய துறைகளையும் வெகுவாக பாதிக்கவே செய்யும். இதனால் வேலையிழப்பு ஏற்படும். குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை பாதிக்கும். அமெரிக்காவின் இந்த அழுத்தத்திற்கு பயந்தால் மிகப் பெரிய அளவில் தவறு நிகழலாம். எனவே, இந்தியா தன் வெளியுறவு கொள்கை தொடர்பான உரிமையை எந்த காலத்திலும் விட்டுத் தரக் கூடாது. தேச நலனுக்கு எதிரான விஷயங்களை அடியோடு வேரறுக்கவும் தயங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
அதே போல், ''வெள்ளை மாளிகை கோமாளி,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்றே இந்த வரி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எங்கள் நாட்டின் அரசு வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு கோமாளியிடம் சிக்கியிருப்பதை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
ரஷ்யாவுடன் நாம் வைத்திருக்கும் வர்த்தகத்திற்கு அபராதம் விதிக்கும் வகையிலேயே இந்தியா மீது, 25 சதவீத வரி விதிப்பை டிரம்ப் சுமத்தி இருக்கிறார். இந்தியா சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. எந்தவொரு மன்னர்கள் முன்பாகவும் அடிமை போல சலாம் போட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
'அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க கூடாது!' அமெரிக்காவின் வரி அழுத்தத்தை சமாளிக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சசி தரூர் கூறிய சில ஆலோசனைகள் முதலில் துாதரக ரீதியிலான விவகாரங்களை விட்டுத் தராமல் உறுதியுடன் இருக்க வேண்டும். அதாவது இந்தியாவின் வெளியுறவு கொள்கை, தற்போது இருப்பது போல தேச நலனை அடிப்படையாக கொண்டே இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் அழுத்தங்களுக்காக, வெளியுறவு கொள்கைக்கான இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது அதே சமயம், வர்த்தகம் தொடர்பான பேச்சுகள் வலுவாக நடக்க வேண்டும். வேளாண் மற்றும் தரவுகள் துறையின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். எதற்காகவும் அதை விட்டுத் தரக்கூடாது இரண்டாவதாக, ஏற்றுமதிக்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், 'ஆசியான்' மற்றும் பிற தெற்காசிய நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் மூன்றாவதாக சர்வதேச போட்டிகளை சமாளிக்கும் வகையில் உள்நாட்டின் திறன் வளர்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது அவசியம். அதே போல் புற சவால்களை ஓரங்கட்டிவிட்டு, இந்திய ஏற்றுமதி துறையை இப்போது இருப்பது போலவே நீடிக்க வைக்க வேண்டும் கடைசியாக உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் சட்ட ரீதியாக தீர்வு காணும் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்காக சர்வதேச வர்த்தக முறைகளில் நியாயமான விதிகள் வகுக்க வேண்டும் என்ற குரலை இந்தியா தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.
'செத்த பொருளாதாரமா? கொன்றதே மோடிதான்!' இந்தியா, ரஷ்யாவின் பொருளாதாரம் செத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு காங்., எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் செத்துவிட்டதாக டிரம்ப் கூறுவது உண்மை தான். பிரதமர் மற்றும் நிதியமைச்சரை தவிர மற்ற அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்துள்ளது. இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது. அதை கொன்றவர் மோடி. அதானி - மோடி கூட்டுறவு, பணமதிப்பிழப்பு மற்றும் மோசமான ஜி.எஸ்.டி., வரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டது, விவசாயிகள் நசுக்கப்பட்டது ஆகிய காரணங்களால் இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது. இந்த உண்மையை சொன்னதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பை நான் பாராட்டுகிறேன். பெரும் பணக்காரான அதானியை மட்டும் வாழவைக்க, பிரதமர் மோடி இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தற்போது இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஒப்பந்தம் இழுபறி ஏன்? இந்தியாவின் வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தையை திறந்து விடும்படி அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால் அதை ஏற்க இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்காவில் அசைவ தீவனங்கள் அளித்து வளர்க்கப்படும் பசுக்களின் பால், பால் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் தொடர் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இது மத உணர்வுகள், கலாசார, பண்பாட்டு வழக்கத்துக்கு எதிரானது என்பது காரணம். இயற்கை தீவனங்களை உண்டு வாழும் கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால், பால் பொருட்கள் என்ற சான்றிதழ் தரப்பட்டால், இறக்குமதியை அனுமதிப்பது பற்றி பரிசீலிப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுவதாக தெரிகிறது. மக்காசோளம், சோயாபீன், கோதுமை, எத்தனால் ஆகியவற்றின் இறக்குமதியை அனுமதிக்கவும் இந்தியா தயக்கம் காட்டி வருகிறது. மேலும், பல பொருட்கள் மீதான அமெரிக்க இறக்குமதி வரியை குறைக்கவும் இந்தியா விடுக்கும் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்க மறுப்பதால் ஒப்பந்தம் இழுபறியாகி வருகிறது.
அடுத்தது என்ன? மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: பலவீனமான பொருளாதாரம் என்பதில் இருந்து மீண்டு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விவகாரத்தில், இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே இதுவரை நான்கு சுற்று பேச்சு நடந்து முடிந்துள்ளன. தற்போது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளதால், இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் நாட்டின் நலனை பாதுகாக்கும் வகையில், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு திறம்பட மேற்கொள்ளும். இவ்வாறு கூறினார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025