Paristamil Navigation Paristamil advert login

8 பந்துகளில் 5 விக்கெட் - வரலாற்று சாதனை படைத்த இந்திய வம்சாவளி பின்லாந்து வீரர் மகேஷ்

8 பந்துகளில் 5 விக்கெட் - வரலாற்று சாதனை படைத்த இந்திய வம்சாவளி பின்லாந்து வீரர் மகேஷ்

31 ஆடி 2025 வியாழன் 07:18 | பார்வைகள் : 430


இந்திய வம்சாவளி பின்லாந்து வீரர் மகேஷ் தாம்பே T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

எஸ்டோனியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பின்லாந்து கிரிக்கெட் அணி 3 T20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடியுள்ளது.

இதில், 2-1 என்ற கணக்கில் பின்லாந்து அணி தொடரை வென்றுள்ளது.

2வது T20 போட்டியில் பின்லாந்து வீரர் மகேஷ் தாம்பே வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய எஸ்டோனியா அணி, 19.4 ஓவர்கள் முடிவில், 141 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதில், 17வது ஓவரை வீசிய பின்லாந்து வீரர் மகேஷ் தாம்பே, தனது ஓவரின் 3, 4 மற்றும் 6 வது பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மீண்டும் 19வது ஓவரை வீசிய அவர், முதல் 2 பந்துகளிலும் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம், T20 போட்டிகளில் குறைந்த பந்துகளில், 5 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிராக, பஹ்ரைன் வீரர் ஜுனைத் அஜீஸ் 10 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

தாம்பேவின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான், கடந்த ஆண்டு சைப்ரஸுக்கு எதிராக 27 பந்துகளில் வேகமாக டி20 சதம் அடித்த சாதனையைப் படைத்துள்ளார்.

39 வயதான மகேஷ் தாம்பே இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என கூறப்படுகிறது. இதுவரை, 28 டி20 போட்டிகளில் விளையாடி, 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்