‘கூலி’ பட கதை இது தானா..?

29 ஆடி 2025 செவ்வாய் 17:28 | பார்வைகள் : 1165
லியோ’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜும், ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு ரஜினியும் இணையும் ‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் அதன் நடிகர்கள் தேர்வு. தற்போது படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரஜினி, நாகார்ஜுனா, சவுபின் ஷாயிர் உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முதல் சிங்கிளான ‘ஜிகிடு’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெளியான ‘மோனிகா’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பூஜா ஹெக்டே - சவுபின் ஷாயிர் நடனம் வைரலானது.
படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளிநாட்டு தணிக்கைக்கு விண்ணபிக்கும்போதே வெளியாகிவிடும். அந்த வகையில் ‘கூலி’ கதைக்களம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஹார்பரை பின்னணியாக கொண்ட இந்தப் படத்தில் தினக்கூலி தொழிலாளர்களை துன்புறுத்தும் ஒரு அரக்க கும்பல் குறித்து படம் பேசும் என தெரிகிறது. அரக்க கும்பலை எதிர்க்கும் ஒரு துறைமுக கூலித் தொழிலாளி செய்யும் சம்பவங்கள் தான் படம்.
.
தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடும் நாயகன், அதில் நடக்கும் சம்பவங்கள் ‘மாஸ்’ தருணங்கள் என கதையை லோகேஷ் கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக திரைக்கதையும், வின்டேஜ் ரஜினியும் ரசிகர்களுக்கான ‘ட்ரீட்’டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கான போராட்டம், உரிமை குறித்து படம் பேசும் என கதைகளத்தை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது.