ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்
30 ஆடி 2025 புதன் 14:22 | பார்வைகள் : 1698
ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் இன்று 2வது நாளாக வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அருகில் ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் ராணுவம் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஸ்ரீநகரில் டச்சிகாம் தேசிய பூங்கா அருகில் ஹர்வான் பகுதியில் சுற்றித்திரிந்த பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகள் சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்சா ஆப்கானி என அடையாளம் காட்டப்பட்டனர். இந்த மூவரில் சுலைமான் ஷா, பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 2வது நாளாக டச்சிகாம் தேசிய பூங்கா அருகில் ராணுவத்தினர் மீண்டும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். அடர் வனப் பகுதியான டச்சிகாமில் மேலும் பல பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று உளவுத்துறை அளித்த தகவல்களின் பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர். பல்வேறு குழுக்களாக ராணுவத்தினர் பிரிந்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதனிடையே, கொல்லப்பட்ட 3 பேரை அடையாளப் படுத்தும் நடவடிக்கைகளும் ராணுவம் தரப்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்டவர்களின் கைரேகைகள், கருவிழிகள், முகத்தை அடையாளப்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
மேலும், பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் இருக்கும் சந்தேக நபர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி, கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண முயன்று வருகின்றனர். வெகு விரைவில் அப்பணிகள் முடிவடைந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று ராணுவ அதிகாரிகள் சிலர் கூறி உள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan