Paristamil Navigation Paristamil advert login

ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக உள்ளே வரும் தமிழக வீரர்

ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக உள்ளே வரும் தமிழக வீரர்

28 ஆடி 2025 திங்கள் 11:24 | பார்வைகள் : 116


5வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக நாராயண் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2 போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும். இங்கிலாந்து வெற்றி பெற்றாலோ, டிராவில் முடிந்தாலோ, இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி விடும்.

இந்நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

4வது டெஸ்ட் முதல் நாளில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை, ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற போது அது காலில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவருக்கு பதிலாக, தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பரான நாராயண் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரை சேர்ந்த 29 வயதான நாராயண் ஜெகதீசன், 2016ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

 

மேலும், 2022ஆம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து, முதல் தர கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். அந்த தொடரில் 277 ஓட்டங்கள் குவித்து, முதல் தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த துடுப்பாட்டக்காரர் என்ற சாதனை படைத்தார்.

 

52 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10 சதம், 14 அரைசதம் உட்பட 3,373 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிக்காக விளையாடி உள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்