தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் சென்றது ஏன்? அமைச்சர் மா.சு., விளக்கம்

28 ஆடி 2025 திங்கள் 07:50 | பார்வைகள் : 176
சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் வளர்ச்சி பெற்றுள்ளதாக தி.மு.க., அரசு கூறுகிறது. அப்படி இருக்கையில், முதல்வர் ஏன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்' என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் ஏற்கனவே இரண்டு மாநிலங்களில் கவர்னராக இருந்துள்ளார். அப்போது, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப் பில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் எங்கே போயிருப்பார் என்பது ஊருக்கு தெரிந்திருக்கும்.
பிரதமர் மோடியின் சகோதரர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மனைவி ஆகியோர், தமிழகம் வந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடாது என்பது அல்ல.
உயர் பொறுப்புகளில் இருப்போர், அரசு மருத்துவமனைகளுக்கு போகும் போது, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றால், அங்கு வரும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முதல்வர் போன்றோர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். எனவே, தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என, பிரித்து பார்க்கக்கூடாது.
அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இருப்பதால் தான், 2021க்கு பின், நோயாளிகள் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.