13 ஆண்டுகளுக்கு பின் பால் தாக்கரே வீட்டில் ராஜ் தாக்கரே

28 ஆடி 2025 திங்கள் 05:50 | பார்வைகள் : 157
மும்பையில் உள்ள மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் வீட்டிற்கு, 13 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக நேற்று சென்ற ராஜ் தாக்கரே, சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரே, கடந்த 2012ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மகன் உத்தவ் தாக்கரே.
பால் தாக்கரேவின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் ராஜ் தாக்கரே.
பால் தாக்கரேவுடன் ஏற்பட்ட மனக்கசப்பைத் தொடர்ந்து, 2005ல் சிவசேனாவில் இருந்து விலகி, மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை ராஜ் தாக்கரே துவங்கினார்.
அப்போது முதல் பிரிந்திருந்த இரு சகோதரர்களும், அதன் பின் நடந்த தேர்தல்களில் எதிரணிகளில் போட்டியிட்டனர்.
கடந்த, 2022ல் சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே பிரித்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைப் பிடித்தார். அப்போது, உத்தவ், ராஜ் தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில், ஹிந்தியைக் கற்பிக்கும் அரசின் உத்தரவுக்கு, சகோதரர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து போராட்டம் நடத்தினர்.
மஹாராஷ்டிராவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில், இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேயின், 65வது பிறந்த நாளை ஒட்டி, அவருடைய வீட்டுக்கு நேரில் சென்று சகோதரர் ராஜ் தாக்கரே, 57, நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
பால் தாக்கரே வசித்து வந்த, மாதோஸ்ரீ என்று அழைக்கப்படும் அந்த வீட்டுக்கு, 13 ஆண்டுக்குப் பின், ராஜ் தாக்கரே சென்றுள்ளார். பூங்கொத்து கொடுத்து, கட்டித் தழுவி, அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.