Paristamil Navigation Paristamil advert login

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வா? அதிர்ச்சி தகவலை கூறிய முன்னாள் வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வா? அதிர்ச்சி தகவலை கூறிய முன்னாள் வீரர்

27 ஆடி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 112


பும்ராவின் ஓய்வு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

2 போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

4 வது போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 669 என்ற இமாலய ஓட்டங்களை எடுத்துள்ளது.

தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், 1 ஓட்டம் மட்டுமே எடுத்து 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 500+ ஓட்டங்களை விட்டுக்கொடுப்பது இதுவே முதல் முறை.

மேலும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் முதல்முறையாக, ஒரு இன்னிங்ஸில் 100 ஓட்டங்ளுக்கு மேல் விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் பும்ரா 33 ஓவர்கள் வீசி, 112 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

அடிக்கடி காயமடைந்து வரும் பும்ரா, 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்னதாகவே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி, 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், பும்ரா விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஓய்வைக் கூட அறிவிக்கலாம். ஏனெனில் அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது அதனாலேயே இந்த போட்டியில் அவருடைய வேகம் குறைந்து விட்டது.

பும்ராவின் உத்வேகம் குறையவில்லை என்றாலும், அவர் அவருடைய உடல் தகுதியிடம் தோற்று விட்டார் என நினைக்கிறேன். மேலும் அவர் ஒரு தன்னலமற்ற மனிதர்.

அவர் தனது பந்துவீச்சை 100% வழங்க முடியவில்லை என்றால், விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று உணர்ந்தால், அவர் தானாகவே ஓய்வு பெற்றுவிடுவார் என்று எனது உள்ளுணர்வு கூறுகிறது.

விராட் கோலி, ரோஹித் சர்மா அஸ்வின் இப்போது இல்லை. அதேபோல், பும்ரா இல்லாமல் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளையும் பார்க்க நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்