விமானத்துடன் நேருக்கு நேர் ஏற்படும் மோதலை தவிர்க்கும் விதமாக 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்!

27 ஆடி 2025 ஞாயிறு 07:54 | பார்வைகள் : 265
விமானத்துடன் நேருக்கு நேர் ஏற்படும் மோதலை தவிர்க்கும் விதமாக சவுத்வெஸ்ட் விமானம் திடீரென கீழ்நோக்கி பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் பர்பாங்கில் இருந்து புறப்பட்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கரமான முறையில் கீழ்நோக்கிப் பாய்ந்ததில் இரண்டு விமானப் பணிப்பெண்கள் காயமடைந்ததுடன், பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர்.
மற்றொரு விமானத்துடன் வானில் மோதலைத் தவிர்க்கும் விதமாக இந்தச் செயல் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
ஃப்ளைட் அவேர் (FlightAware) விமானத் தரவுகளின்படி, விமானம் வெறும் 36 வினாடிகளில் 300 அடி கீழே இறங்கியுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் நிலைமை மிகவும் குழப்பமாக இருந்ததாகவும், பலரும் விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என அஞ்சியதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர், "வானில் மோதலைத் தவிர்க்க விமானி ஆக்ரோஷமாக கீழ்நோக்கிப் பாய்ந்தார்," என்று X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் தானும் மற்றவர்களும் "இருக்கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டு, கூரையில் தலை மோதியதாகவும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திகிலூட்டும் சம்பவத்திற்குப் பிறகும், போயிங் 737 விமானம் தனது இலக்கான லாஸ் வேகாஸுக்குத் தொடர்ந்து பயணித்து, எந்தவிதப் பிரச்சினையும் இன்றி பத்திரமாக தரையிறங்கியது.
இந்த வர்த்தக ஜெட் விமானம் ஒரு பிரிட்டிஷ் போர் ஜெட் விமானமான ஹாக்கர் ஹண்டர் எம்.கே. 58 உடன் ஆபத்தான நெருக்கத்தில் வந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த சூழ்நிலைகளை மேலும் புரிந்துகொள்ள சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் தற்போது ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனுடன் (FAA) இணைந்து செயல்பட்டு வருகிறது.