தாய்லாந்து – கம்போடியா இடையில் தொடரும் மோதல்!

27 ஆடி 2025 ஞாயிறு 06:54 | பார்வைகள் : 229
குறைந்தது 16 பேரைக் கொன்ற அதிகரித்து வரும் எல்லை மோதலை உடனடியாக நிறுத்துமாறு பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் இருந்து அழைப்புகள் வந்த போதிலும், தாய்லாந்தும் கம்போடியாவும் வெள்ளிக்கிழமை (25) கனரக பீரங்கி தாக்குதலை பரிமாறிக்கொண்டன.
அதன்படி, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அவர்களின் மோசமான மோதல் இரண்டாவது நாளாக நீடித்தது.
தாய்லாந்தின் இராணுவம் உபோன் ரட்சதானி மற்றும் சுரின் மாகாணங்களில் அதிகாலையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், கம்போடியா பீரங்கி மற்றும் ரஷ்ய தயாரிப்பான BM-21 ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்தியதாகவும் கூறியது.
மோதல் பகுதிகளில் இருந்து குறைந்தது 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்தி கம்போடியாப் படைகள் தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன” என்று தாய் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தந்திரோபாய சூழ்நிலைக்கு ஏற்ப தாய்லாந்து படைகள் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
வியாழக்கிழமை (24) ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் மோதலைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.
இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இறையாண்மை சர்ச்சைக்குரிய ஒரு எல்லை பகுதியாகும். தாய்லாந்து முந்தைய இரவு கம்போடிய தலைநகர் புனோம் பென்னுக்கான அதன் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டு சில மணிநேரங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை மோதல் வெடித்தது.
வியாழக்கிழமை பிற்பகுதியில் தாய்லாந்து இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 14 பேர் பொதுமக்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 15 வீரர்கள் உட்பட 46 பேர் காயமடைந்ததாக அது கூறியது.
கம்போடியாவின் தேசிய அரசாங்கம் எந்தவொரு உயிரிழப்புகள் அல்லது பொதுமக்களின் வெளியேற்றங்கள் குறித்த விவரங்களை வழங்கவில்லை.