லோக்சபாவில் நாளை ஆப்பரேஷன் சிந்துார் விவாதம்!

27 ஆடி 2025 ஞாயிறு 11:51 | பார்வைகள் : 131
ஆப்பரேஷன் சிந்துார் விவகாரம் தொடர்பான சிறப்பு விவாதம் லோக்சபாவில் நாளை நடக்கிறது. இதில் பிரதமர் மோடியும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பார்லிமென்டில் நாளை அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி துவங்கியது. ஆப்பரேஷன் சிந்துார், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம், பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்த பிரச்னைகள் பற்றி விவாதிக்க உரிய நேரம் ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த ஒரு வாரமாகவே பார்லி., நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி லோக்சபாவில் நாளை விவாதம் நடத்தப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 16 மணி நேரம் நடக்கும் இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பதில் அளிக்கவுள்ளனர்.
பிரதமர் மோடியும், இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், லோக்சபாவில் நாளை அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரம், ராஜ்யசபாவில் நாளை மறுநாள் சிறப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி 33 உலக நாடுகளுக்கு சென்று விளக்கம் அளித்த பார்லிமென்டின் அனைத்துக் கட்சிக் குழுவினரும் இந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டு விழாவையொட்டி, கடந்த காலங்களில் சிறப்பு விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இதற்கென லோக்சபாவில் குறிப்பிட்ட விதிகள் ஏதும் வகுக்கப் படவில்லை.