Paristamil Navigation Paristamil advert login

கம்போடியா எல்லைக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: துாதரகம் எச்சரிக்கை

கம்போடியா எல்லைக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: துாதரகம் எச்சரிக்கை

27 ஆடி 2025 ஞாயிறு 09:51 | பார்வைகள் : 157


தாய்லாந்து - கம்போடியா எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் மோதிக்கொள்வதால், எல்லையோரப் பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என கம்போடியாவில் உள்ள நம் நாட்டு துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து -- கம்போடியா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை உள்ளது.

கடந்த மே மாதம் கம்போடியா ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது.

இது கடந்த 24ம் தேதி இரு நாடுகளுக்கிடையே மோதலாக மாறியது. பீரங்கிகள், ஏவுகணைகள் வாயிலாக மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

நேற்று மூன்றாவது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்தது. தாய்லாந்து நான்கு கடற்படை கப்பல்களை கம்போடியாவுக்கு அருகே நிறுத்தியது.

பல்வேறு எல்லையோர கிராமங்களில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது.

இதுவரையிலான மோதலில் இரு தரப்பிலும் மொத்த பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இதில் 13 பேர் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள். 20 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் பொது மக்கள்.

தாய்லாந்தில் 1,31,000 மக்களும், கம்போடியாவில் 37,000 எல்லையோர மக்களும் வீடுகளை விட்டு கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்தனர்.

நேற்று முன்தினம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அவசர கூட்டம் நடத்தின.

அதில், இரு நாடுகளுக் கிடையே பதற்றத்தை தணிக்க ஆசியான் அமைப்பு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தன.

இதற்கிடையே மோதல்கள் தொடர்வதால் கம்போடியாவில் உள்ள நம் நாட்டின் துாதரகம், எல்லை பகுதிகளுக்கு பயணிப்பதை இந்தியர்கள் தவிர்க்கும்படி கூறியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்