அயர்லாந்தில் இந்தியர் மீது இனவெறித்தாக்குதல் - காப்பாற்றிய பெண்மணி

25 ஆடி 2025 வெள்ளி 15:40 | பார்வைகள் : 399
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறித்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஆடைகள் இல்லாமல், இரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அவரை உள்ளூர் பெண்மணி ஒருவர் காப்பாற்றியதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெனிபர் (Jennifer Murray) என்னும் பெண்மணி, 15 முதல் 16 வயதுடைய சுமார் 10 பதின்ம வயதினர் உட்பட 30 ஆண்கள் இந்திய இளைஞர் ஒருவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்குவதைக் கவனித்துள்ளார்.
உடனடியாக காரை விட்டு இறங்கி அந்த இளைஞரிடம் ஓடிய ஜெனிபர், தான் கண்ட காட்சி தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
உடலில் உடைகள் எதுவும் இல்லாமல், தலை முதல் பாதம் வரை இரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அந்த இளைஞர், ஜெனிபரைக் கண்டதும் தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என கதறியிருக்கிறார்.
அவரைச் சூழ்ந்து நின்ற ஆண்களைப் பார்த்து, விலகி நில்லுங்கள் என சத்தமிட்ட ஜெனிபர், அந்த இளைஞரை தனது காருக்கு அழைத்துக் சென்று அவருக்கு ஒரு கால்சட்டையும் கம்பளியும் கொடுத்துள்ளார்.
விரல்களுக்கு இடையே பிளேடுகளை மறைத்துவைத்துக்கொண்டு அவரை அந்த ஆண்கள் குத்தியிருக்கிறார்கள். அவரது மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் நிற்கவேயில்லை என்கிறார் ஜெனிபர்.
பொலிசாரையும் ஆம்புலன்சையும் அழைத்துவிட்டு, அவர்கள் வரும்வரை அவருடனேயே இருந்திருக்கிறார் ஜெனிபர்.
இது குறித்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அயர்லாந்து நாட்டவர்களே, உங்கள் பிள்ளைகள் அப்பாவி மக்களை முகத்தில் குத்திக்கொண்டு அலைகிறார்கள் என்று கூறியுள்ளார்.
அவர் மீது அந்தக் கூட்டம் அபாண்டமான பழிகளை சுமத்த, அவர் அப்படி எதுவும் செய்யவில்லை என்பது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ள ஜெனிபர், இது அப்பட்டமாக இனவெறித்தாக்குதல்தான் என்கிறார்.
அந்த இளைஞர், தான் ஒரு வாரம் முன்புதான் தான் அயர்லாந்துக்கு வேலைக்கு வந்ததாகவும், இந்தியாவில் தனக்கு மனைவியும் 11 மாதக் குழந்தை ஒன்றும் இருப்பதாகவும் தெரிவித்ததாக ஜெனிபர் தெரிவிக்கிறார்.