மகளிர் உலகக்கிண்ண சேஸ் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி வரலாறு படைத்த முதல் இந்தியர்...!

25 ஆடி 2025 வெள்ளி 10:40 | பார்வைகள் : 121
சீன வீராங்கனை டேன் ஜோங்கியியை வீழ்த்திய இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், மகளிர் உலகக்கிண்ண சேஸ் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்.
ஜார்ஜியாவில் FIDE மகளிர் உலகக்கிண்ண செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் டேன் ஜோங்கியை எதிர்கொண்டார்.
இப்போட்டியை 1.5 - 0.5 என்ற கணக்கில் திவ்யா வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
அத்துடன் FIDE மகளிர் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
மேலும், இந்த வெற்றி அவருக்கு 2026 மகளிர் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறவும், முதல் கிராண்ட் மாஸ்டர் நார்ம் பெறவும் உதவியுள்ளது.
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த மருத்துவர் பெற்றோர்களான ஜிஜேந்திரா மற்றும் நம்ரதா தம்பதிக்கு பிறந்த இளைய மகள்தான் திவ்யா தேஷ்முக்.
இவரது சகோதரி பூப்பந்து விளையாட்டில் ஆடத் தொடங்கியதால், இவருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது.
ஆனால் செஸ் விளையாட்டை தேர்ந்தெடுத்த திவ்யா, தனது ஐந்து வயதிலேயே பயணத்தைத் தொடங்கினார்.
2012ஆம் ஆண்டு 7 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பை வென்ற இவர், சென்னையைச் சேர்ந்த ஜி.எம்.ஆர்.பி.ரமேஷிடம் பயிற்சி பெற்றார்.
மேலும் 2014யில் டர்பனில் U-10 மற்றும் 2017யில் பிரேசிலில் U-12 ஆகிய பிரிவுகளில் உலக இளைஞர் பட்டங்களை வென்றார்.
அத்துடன் தனது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் 2021ஆம் ஆண்டு பெற்றார். சர்வதேச மாஸ்டர் பட்டத்தை 2023ஆம் ஆண்டில் வென்ற திவ்யா, 2024யில் உலக ஜூனியர் பெண்கள் U-20 சாம்பியன்ஷிப்பை உலகின் நம்பர் 1 ஆக வென்றார்.
திவ்யா தேஷ்முக் தனது மூன்று செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கங்களையும், பல ஆசிய மற்றும் உலக இளைஞர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.