20 லட்சம் பேரை திரட்டி த.வெ.க., மாநாடு: இலக்கு நிர்ணயம்

25 ஆடி 2025 வெள்ளி 08:48 | பார்வைகள் : 184
த.வெ.க., மாநாட்டிற்கு 20 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என, அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதால், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற கிராமத்தில், 2024 அக்டோபரில் நடந்தது. இதில், ஐந்து லட்சம் பேர் வரை பங்கேற்றதாக த.வெ.க.,வினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை மாவட்டம் பெருங்குடி அடுத்த பாரப்பத்தியில், ஆகஸ்ட் 25ல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்காக, வாகன நிறுத்தம் உட்பட, 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க.,வுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி தலைமை கூறி வருகிறது. எனவே, மாநாட்டிற்கு 20 லட்சம் பேரை திரட்ட உள்ளோம் என, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவங்கியபோது கூடிய கூட்டத்தை விட, மூன்று மடங்கு கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 120 மாவட்டச் செயலர்களுக்கும் எத்தனை பஸ்களில் தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என, பட்டியல் கொடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மக்கள் பொழுதுபோக்கும் வகையில், பெரிய அளவில் வசதிகள் இல்லை. மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம், உணவு பந்தல் உள்ளிட்ட வசதிகளை செய்தால், மதுரை மட்டுமின்றி, சுற்றுப்பகுதி மாவட்ட மக்களும் மாநாட்டிற்கு அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
'இப்படி செய்தால், மாநாட்டுக்கு வருவோர் 20 லட்சம் பேர் என்ற இலக்கை அடைந்து விடலாம்' எனவும் கணக்கு போட்டுள்ளனர். ஆனால், எவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்தாலும், 20 லட்சம் பேரை திரட்டுவது சாதாரண விஷயம் இல்லை என்ற கருத்தும் உள்ளது. இதனால், த.வெ.க., மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ஒரு இடத்தில் சாதாரணமாக, 1 லட்சம் பேரை திரட்டினாலே கூட்டம் பிரமாண்டமாக இருக்கும். அவர்களை கையாள்வதற்கே சிரமம் ஏற்படும். மேலும், 20 லட்சம் பேரை அழைத்து வந்து, இதுவரை எந்த கட்சியும் மாநாடு நடத்தியதாக வரலாறு இல்லை.
தி.மு.க., சேலத்தில் நடத்திய இளைஞர் அணி மாநாட்டிலும், அ.தி.மு.க., மதுரையில் நடத்திய மாநாட்டிலும், ஐந்து லட்சம் பேர் கூட திரளவில்லை. தமிழகத்தில் ஆறு கோடி வாக்காளர்கள் உள்ளனர் என வைத்துக் கொண்டால், மொத்த வாக்காளர்களில் 3 சதவீதம் பேரை, மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்பது எப்படி சாத்தியம் என புரியவில்லை. இந்த கணக்கு தெரியாமல், கட்சி தலைவர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.