புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

23 ஆடி 2025 புதன் 12:22 | பார்வைகள் : 222
புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்டார்மர் வெளியிட்டுள்ள செய்தியில், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த, எதையும் செய்ய உறுதிபூண்டுள்ளோம்.
அவ்வகையில், முதன்முறையாக, ஆட்கடத்தல் கும்பல்களை குறிவைத்து புதிய தடைகள் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க பயன்படுத்தும் படகுகள், போலி பாஸ்போர்ட் ஆகியவற்றை வழங்குபவர்கள், அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்படும்.
அவர்களுடைய வங்கிக்கணக்குகள் முடக்கப்படும். அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்.
முந்தைய அரசுகள் ருவாண்டா திட்டம் போன்ற அதிக செலவு பிடிக்கும் திட்டங்களை முன்வைத்தன. அதனால் எந்த பயனும் இல்லை.
அதற்கு பதிலாக, பலனளிக்கக்கூடிய நடைமுறைத் திட்டங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
முந்தைய ஆண்டைவிட அதிக அளவில், நம் நாட்டில் வாழத் தகுதி இல்லாத 35,000 பேரை திருப்பி அனுப்பியுள்ளோம்.
புலம்பெயர்வோர் பயணிக்கும் படகுகள் ஜேர்மன் சேமிப்பகங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஜேர்மன் பொலிசார் கைப்பற்றும் வகையில் ஜேர்மனியுடன் கைகோர்த்துள்ளோம்.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்கும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சிலிருந்து வருவோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்ப பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மேலும், பிரித்தானியாவுக்கு வந்தால் வேலை செய்யலாம் என்று சொல்லித்தான் ஆட்கடத்தல்காரர்கள் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு அழைத்துவருகிறார்கள்.
தற்போது, அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் பிரதமர் ஸ்டார்மர்.