செம்மணி புதைகுழியில் இன்றும் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

22 ஆடி 2025 செவ்வாய் 17:53 | பார்வைகள் : 211
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 17ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது
அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மற்றும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் ஆகிய 15 எலும்பு கூட்டு தொகுதிகளும் , அதனுடன் அடையாளம் காணப்பட்டுள்ள பால் போச்சியை ஒத்த போத்தல் , ஆடையை ஒத்த துணிகள் என்பவற்றை நாளைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 26 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் போது, 65 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு தினங்களில் 15 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.