இலங்கையில் காதலனை காப்பாற்ற முயன்ற காதலி மாயம்

21 ஆடி 2025 திங்கள் 09:37 | பார்வைகள் : 830
மஹியங்கனை 17 ஆம் கட்டை பகுதியில் உள்ள வியானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த காதல் ஜோடியில், காதலன் நீரில் அடித்துச் சென்றதையடுத்து, அவரைக் காப்பாற்ற முயன்ற காதலி நீரில் அடித்துச் சென்று காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
இச் சம்பவம் திங்கட்கிழமை (20) அன்று இடம் பெற்றுள்ளதுடன் காணாமல் போன பெண் வெலிகத்த குடாகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ரஷ்மி லக்ஷிகா மெண்டிஸ் எனவும் அவர் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கொழும்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மஹியங்கனை வழியாக தனது காதலனுடன் காரில் வீடு திரும்பிய நிலையில் மாலை 5 மணியளவில், 17 ஆம் கட்டை பகுதியில் உள்ள ஆற்றின் அருகே வாகனத்தை நிறுத்தி குளித்துக் கொண்டிருந்தபோது காதலன் நீரில் அடித்துச் சென்றுள்ளார். இந் நிலையில் அவரைக் காப்பாற்ற முயன்ற போது, காதலியும் நீரில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அந்த வழியாக பயணித்த பொலிஸ் அதிகாரியொருவர் உடனடியாக வந்து இளைஞனை நீரிலிருந்து வெளியே எடுத்துள்ளதுடன் நீருக்குள் விழுந்த இளம் பெண் காணாமல் போயுள்ளார்.
மேலும் காணாமல் போன இளம் பெண்ணைத் தேடும் நடவடிக்கையை பதுளை மற்றும் மஹியங்கனை பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.