Paristamil Navigation Paristamil advert login

ம.தி.மு.க., அஸ்தமமாகி விட்டது : நாஞ்சில் சம்பத்

ம.தி.மு.க., அஸ்தமமாகி விட்டது : நாஞ்சில் சம்பத்

21 ஆடி 2025 திங்கள் 16:00 | பார்வைகள் : 172


தே.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, 12 'சீட்', ஒரு மத்திய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி கேட்டு பேசி முடித்து விட்டனர்'' என, முன்னாள் ம.தி.மு.க., நிர்வாகி நாஞ்சில் சம்பத் கூறினார்.

அவரது பேட்டி: வைகோவும், துரையும் தவிர, ம.தி.மு.க.,வில் உள்ள அனைவரும், என்னிடம் தொடர்பில் உள்ளனர். அவர்கள் தவிர, முக்கியமான இடங்களில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் ம.தி.மு.க., குறித்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.

குடும்ப கட்சி


பா.ஜ.,விடம் ம.தி.மு.க., விலைபோய் விட்டது. துரைக்கு அதிகார பசி ஆட்டி படைக்கிறது. துரைக்கும், ம.தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், புத்திரனை வைத்துக் கொண்டு, மொத்த கட்சியையும் குடும்பக் கட்சியாக்கி இருக்கிறார் வைகோ.

கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட, கட்சிக்காக காலம் காலமாக உழைத்த, பலரும் காத்திருந்தனர். தங்களில் ஒருவருக்கு அந்த தொகுதியை வைகோ ஒதுக்குவார் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர். ஆனால், வைகோ தொகுதியை தன் மகன் துரைக்கு கொடுத்தார்.

கட்சிக்கு உழைத்தவர்களை விட, மகன் தான் முக்கியம் என முடிவெடுத்து, தொகுதியை ஒதுக்கினார். விளைவு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ம.தி.மு.க., தேய்ந்து விட்டது. வைகோவின் சுய நல செயல்பாடுகளால், ம.தி.மு.க.,வை விட்டு எல்லோரும் வெளியேறுகின்றனர். 'நெருப்பில் கூட படுக்கலாம். வைகோவுடன் யாரும் இருக்க முடியாது' என கட்சியினர் முடிவெடுத்து விட்டனர்.

தற்போது ம.தி.மு.க.,வில் இருப்போரை, மொத்தமாக இரண்டு மினி பஸ்களில் ஏற்றி விடலாம். ம.தி.மு.க., அஸ்தமமாகி விட்டது. அக்கட்சிக்கு முடிவு நெருங்கி விட்டது.

துரை ஒரு ஹிட்லர்


வைகோ தன் மகனுக்காக, கட்சியையே தாரை வார்த்து விட்டார். திருச்சியில் வெற்றி பெற்ற ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை ஆகியோர் மத்திய அமைச்சராகினர். அந்த சென்டிமென்ட்படி, தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை, துரைக்கு வந்து விட்டது. அதற்கான முயற்சிகளில் தந்தையும் மகனும் களம் இறங்கி விட்டனர்.

ம.தி.மு.க., வை இனி மீட்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, 12 சீட், ஒரு மத்திய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி கேட்டு, கூட்டணி பேசி முடித்து விட்டனர். ஹிட்லர், சுவஸ்திக் பட்டையை, தன் கையில் கட்டியிருப்பார். துரையும் ஒரு ஹிட்லர் தான். அவரும், கட்சிக் கொடியை கைப்பட்டையாக கட்டியுள்ளார். கோவணத்தை இடுப்பில் தான் கட்ட வேண்டும். ஆனால், துரை சட்டையில் கட்டியுள்ளார்.

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். பூமிநாதன் எம்.எல்.ஏ., விரைவில் தி.மு.க.,விற்கு சென்று விடுவார். ம.தி.மு.க.,வுக்கு வைகோ முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். வைகோவின் தவறான செயல்பாடுகளால், மிச்ச சொச்சமிருக்கும் ம.தி.மு.க.,வினர் அனைவரும் தி.மு.க.,வை நோக்கிச் சென்று விடுவர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்