மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி.,; தி.மு.க.,வினர் எதிர்ப்பு

21 ஆடி 2025 திங்கள் 15:01 | பார்வைகள் : 157
மதுரை மாநகராட்சி குப்பை நகராக உள்ளதால் அதன் துாய்மையைப் பேணிக்காக்க முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்'' என மதுரையின் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் விமர்சனம் செய்ததற்கு, 'கூட்டணி சுகத்தில் 6 ஆண்டுகளாக குளிர்காயும் இவர் எப்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவிக்கலாம்' என தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.
மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் 2024 -2025க்கான துாய்மை நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் '10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை 40வது இடம் பெற்றுள்ளது. மதுரையில் வீடுதோறும் குப்பை சேகரித்தல் 37 சதவீதம், தரம் பிரித்தல் 26 சதவீதம், பொது கழிப்பிடங்கள் துாய்மையின்றி இருப்பதால் 3 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளதாக வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகள் பட்டியலிலும் 543வது இடம் பெற்று, மதுரையின் துாய்மை மோசமாக உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் தலையிட வேண்டும்' என வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: தேசிய அளவில், 3 லட்சத்திற்கும் கீழ், 3 முதல் 10 லட்சம் வரை, 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என 3 பிரிவுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேல் உள்ள மாநகராட்சிகளில் மதுரை 40, சென்னை 38, கோவை 28வது இடங்களை பெற்றுள்ளன.
வீடுதோறும் குப்பை சேகரிப்பு பிரிவில் மதுரை 90 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆய்வில் புள்ளிவிபரங்கள் தவறாக உள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மூலம் மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மதுரையில் துாய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக துாய்மை பணி சவாலாக உள்ளது. போராட்டத்தை நடத்துவதில் வெங்கடேசன் சார்ந்த கட்சியின் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆய்வில் 3 முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஈரோடு, சேலம் மாநகராட்சிகளுக்கும் கடைசி இடங்கள் தான் கிடைத்துள்ளன. 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அகமதாபாத் முதலிடம் பெற்றுள்ளது. சென்னைக்குக்கூட 38 வது இடம் தான் கிடைத்துள்ளது. மதுரையை விமர்சித்த வெங்கடேசன், சென்னையையும் விமர்சித்திருக்கலாமே.
பதிலடி தருவோம்
வட மாநில நகரங்கள் துாய்மையானவை என்பது போல் ஆய்வு முடிவுகள் உள்ளன. தமிழக நகரங்களுக்கு கடைசி இடங்கள்தான் கிடைத்துள்ளன.
ஆனால் இதுகுறித்த பார்வை வெங்கடேசனுக்கு இல்லை. இவரது கட்சியை சேர்ந்தவர் தானே துணைமேயராக உள்ளார். மதுரையில் ஏன் துாய்மை இல்லை என அவரையே கேட்கலாமே. இதே ஆய்வில் மாநில அளவில் மதுரை 3வது இடம் பிடித்துள்ளதே. இது தமிழக அரசுக்கு பெருமை தானே. அதை ஏன் பாராட்ட அவருக்கு மனம் இல்லை.
தி.மு.க., கூட்டணி குதிரையில் சவாரி செய்து ௨வது முறை எம்.பி., பதவி சுகம் அனுபவிக்கும் வெங்கடேசன், தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இனியும் விமர்சித்தால் தக்க பதிலடி தருவோம், என்றனர்.