பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது என பழனிசாமி! திட்டவட்டம்

21 ஆடி 2025 திங்கள் 10:01 | பார்வைகள் : 156
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதன்பின் அமையவுள்ள ஆட்சியில், பா.ஜ.,வுக்கு பங்கு கொடுக்க வாய்ப்பே இல்லை; தனித்தே ஆட்சி அமைப்போம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை கேட்க நாங்கள் ஏமாளி அல்ல,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி தான் அமையும். அதில், பா.ஜ., கட்டாயம் அங்கம் வகிக்கும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது' என, கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் பதிலுக்கு கூறி வருகிறார்.
மறுக்கவில்லை
இந்நிலையில், தமிழகம் முழுதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:
'பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்ததால் தான், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது' என, தமிழக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். ரெய்டு நடந்தது உண்மை தான்; மறுக்கவில்லை.
ஆனால், அது சம்பந்தி வீட்டில் அல்ல; உறவினர் வீட்டில் தான் நடந்தது. ரெய்டுக்கு எல்லாம் அச்சப்பட்டு அரசியல் செய்பவன் அல்ல, இந்த பழனிசாமி.
சட்டசபை நடந்து கொண்டிருந்த போது, அமைச்சர் நேருவின் மகன் மற்றும் தம்பி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அந்த தகவல் வந்ததும், அவர் தான், கூட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பாதியில் எழுந்து பதற்றத்தோடு சென்றார்.
இவ்வளவு அழுக்கை வைத்துக் கொண்டு இருப்பவர் தான், எங்கள் அழுக்கு குறித்து பேசுகிறார். எங்களை பற்றி பேச அவருக்கு எவ்வித அருகதையும் கிடையாது.
நடக்காத எதையும் நடந்தது போல பேசி, எதையும் மடைமாற்றம் செய்வதில் வல்லவர்கள் தி.மு.க.,வினர். எத்தனை முறை பேசினாலும், பொய் பொய் தான்.
கொள்ளை அடித்த பணத்தை பதுக்கியதால் தான், தி.மு.க., பிரமுகர்களின் வீடு தோறும் அமலாக்கத்துறை கதவை தட்டி சோதனை நடத்தி துாக்கத்தை கெடுக்கிறது. அலறலில், தி.மு.க.,வினர் ஊரைக் கூட்டுகின்றனர்.
நான் ஒரு விவசாயி. யாருடைய தயவும் இன்றி, கிளைச்செயலர் பொறுப்பில் இருந்து, படிப்படியாக உயர்ந்து, அ.தி.மு.க., எனும், மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலராகி உள்ளேன். ஸ்டாலினை போல அப்பா பெயரை பயன்படுத்தி அரசியலுக்கு வரவில்லை.
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டதும், தீண்டத்தகாத கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது போல தி.மு.க.,வினர் விதண்டாவாதம் பேசுகின்றனர்.
அதே பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, மத்திய அமைச்சரவையில் பங்கேற்று, ஆட்சி சுகத்தை அனுபவித்த போது, பா.ஜ., தீண்டத்தகாத கட்சியாக தி.மு.க.,வுக்கு தெரியவில்லையா?
இந்த நியாயத்தை கேட்க விடுதலை சிறுத்தைகளுக்கோ, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கோ தெம்பில்லை.
கடும் அச்சம்
தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிப்பதையே முழு நேர தொழிலாக கொண்டிருக்கும் அக்கட்சிகள், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி குறித்தே சர்வ சதா காலமும் பேசிக் கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து வலுவான கூட்டணி அமைத்து விட்டதால், தி.மு.க., கூட்டணியினருக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைப்போக்கவே, இப்படி எதை எதையோ பேசுகின்றனர். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய கட்சிகள், தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டன.
சட்டசபையில் என்னை பார்த்து, 'என்னங்க, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விட்டீர்கள். ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று பேசினீர்களே?' என, முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.
உடனே, 'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்?' என்று நான் கேட்டேன். 'பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால், ஆட்சியில் பங்கு கேட்பர்' என்றார்.
ஸ்டாலின் அவர்களே, ஒரு நாளும் நீங்கள் இதற்காக பதற்றப்பட வேண்டாம். ஆட்சியில் பங்கு கொடுக்க, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
அ.தி.மு.க.,வே தனிப்பெரும்பான்மை பெறும் போது, யாருக்கும் பங்கு தர வேண்டியதில்லை. எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். எதை பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
வாரிசை முதல்வர் ஆக்குவதற்காக, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற துடிப்பான நிலையில் அ.தி.மு.க., இல்லை. எங்களது ஒரே நோக்கம், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான்.
அந்த எண்ணத்தோடு வருகிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கிறோம். இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு ஒருமித்த எண்ணத்தோடு வருவர்.
அகற்றுவர்
உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுப்பர். அதை எடுத்து விட்டால் மூச்சு நின்று விடும். அதுபோன்ற நிலையில், தி.மு.க., அரசு உள்ளது. விரைவில் வென்டிலேட்டரை மக்கள் அகற்றுவர்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
ஆட்சியில் பங்கில்லை என்ற பழனிசாமியின் இந்தப் பேச்சால், பா.ஜ., தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கும் இந்த பேச்சு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள், அமித் ஷா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
'அமித் ஷாவின் கருத்தை அறிந்து, இந்த விஷயத்தில் பா.ஜ., தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும்' என தமிழக பா.ஜ., தரப்பில் சொல்கின்றனர்.