நைஜரில் இந்தியரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் - தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

20 ஆடி 2025 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 242
நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துடன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன்பிறகு, ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கிடையேயான உள்நாட்டு போர் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 15 ஆம் திகதி டோசோ பகுதியில், ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையேயான தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 6 பேரில் இருவர் இந்தியர்கள் ஆவார்கள். ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம், போகரா பகுதியை சேர்ந்த கணேஷ் கர்மாலி (39) என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
மற்றொருவர், தென்னிந்தியாவை சேர்ந்த கிருஷ்ணன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. ஆனால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடத்திச் செல்லப்பட்டவர் காஷ்மீரை சேர்ந்த ரஞ்சித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்த டிரான்ஸ்ரயில் லைட்டிங் நிறுவனத்தின் நைஜர் நாட்டின் கிளையில் பணியாற்றியுள்ளனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நைஜர் நாட்டு இந்திய தூதரகம், கடத்தி செல்லப்பட்ட இந்தியரை மீட்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தெரிவித்துள்ளது.