பாகிஸ்தானுடன் விளையாட மறுத்த 4 இந்திய வீரர்கள் - WCL போட்டி ரத்து

20 ஆடி 2025 ஞாயிறு 10:12 | பார்வைகள் : 124
WCL தொடரில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2025 சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடர், இங்கிலாந்தில் 20-07-2025 தொடங்கி ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில், யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியும், முகமது ஹபிஸ் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியும் ஜூலை 20 ஆம் திகதி மோத இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் காரணமாக ஏற்பட்ட போர் பதற்றத்திற்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக மோத உள்ளதால், இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட மூத்த இந்திய அணி வீரர்கள் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே பதற்றம் உள்ள நிலையில், அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக, அணி நிர்வாகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலை, ஷிகர் தவான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், WCL ஸ்பான்சரான EaseMyTrip, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்த WCL போட்டியிலும் தொடர்புடையதாகவோ அல்லது பங்கேற்கவோ மாட்டாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "2 ஆண்டுகளுக்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) உடன் 5 ஆண்டு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், எங்கள் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக உள்ளது.
பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்த WCL போட்டியிலும் தொடர்புடையதாகவோ அல்லது பங்கேற்கவோ மாட்டாது என தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடு WCL அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. EaseMyTrip அணி இந்தியாவை ஆதரிக்கிறது" என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்வதாக WCL நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக WCL வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவதற்காகவும், சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகளை தொடர்ந்தே இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த முடிவு பலரது உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம், குறிப்பாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு இந்த நிகழ்வு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம், கிரிக்கெட் மீதான அன்பினால் தங்களுக்கு ஆதரவளித்த பிராண்டுகளையும் இது பாதித்திருக்கலாம்.
இதன் காரணமாக இந்த போட்டியை ரத்து செய்கிறோம். ரசிகர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மீண்டும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.
ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவருவதே எங்கள் ஒரே நோக்கமாக இருந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளனர்.