ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு புடின் பகிரங்க பதிலளிக்காதது ஏன்...? செய்தித்தொடர்பாளரின் விளக்கம்

19 ஆடி 2025 சனி 17:27 | பார்வைகள் : 416
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதாரத் தடை எச்சரிக்கைக்கு, ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்னும் பதில் அளிக்காதது ஏன் என பெஸ்கோவ் விளக்கமளித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் 50 நாட்களுக்குள் ஏற்படாவிட்டால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலை ரஷ்ய அதிகாரிகளும், அரசு ஊடகங்களும் நிராகரித்ததாகத் தோன்றியது.
அதே சமயம் ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) இன்னும் அந்த அறிக்கைக்கு பகிரங்கமாக பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) கூறுகையில், "அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கை ஒரு தீவிரமானது. வாஷிங்டனில் என்ன கூறப்பட்டது என்பதை பகுப்பாய்வு செய்ய எங்களுக்கு நிச்சயமாக நேரம் தேவை. ஜனாதிபதி புடின் அது அவசியம் என்று கருதினால், அவர் அதைப் பற்றி கருது தெரிவிப்பார்" என்றார்.
மேலும் அவர், "இப்போதைக்கு ஒன்று தெளிவாக உள்ளது; வாஷிங்டனிலும், நேட்டோ நாடுகளிலும், பிரஸ்ஸல்ஸிலும் நேரடியாக எடுக்கப்பட்ட முடிவுகளை உக்ரைன் தரப்பு அமைதிக்கான சமிக்ஞையாகப் பார்க்கவில்லை, மாறாக போரைத் தொடர்வதற்கான சமிக்ஞையாகப் பார்க்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அவர் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக டிமித்ரி மெட்வெடேவ் தனது எக்ஸ் பக்கத்தில், "கிரெம்ளினுக்கு நாடக இறுதி எச்சரிக்கை. உலகம் அதிர்ந்தது, விளைவுகளை எதிர்பார்த்தது. போர்க்குணமிக்க ஐரோப்பா ஏமாற்றமடைந்தது. ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை" என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.