காஸாவின் மிகப்பெரிய நகரைக் கைப்பற்றும் இஸ்ரேல்...?

17 ஆவணி 2025 ஞாயிறு 19:04 | பார்வைகள் : 226
கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடிக்கும் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காஸா சிட்டியின் தெற்கு Zeitoun மாவட்டத்தின் ஹமாஸ் ஆட்சியின் கீழ் செயல்படும் நகராட்சி ஒன்று தற்போது பேரழிவின் விளிம்பில் இருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், டாங்கி ஷெல் தாக்குதல்கள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் நடவடிக்கைகளால் இங்குள்ள மக்கள் கிட்டத்தட்ட நரகத்திற்கு நிகரான துன்பங்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் போர் பிரகடனத்திற்கு முன்னர் சுமார் 50,000 மக்கள் வசித்து வந்த Zeitoun பகுதி, ஆறு நாட்கள் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து உணவு, தண்ணீர் அல்லது செயல்பாடும் உள்கட்டமைப்பு எதுவும் இல்லாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
சனிக்கிழமை மட்டும் இப்பகுதியில் 40 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நகரத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை தெற்கில் உள்ள கூடார முகாம்களுக்கு விரட்டியடிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை இஸ்ரேல் சர்வசாதாரணமாக முன்னெடுத்து வருகிறது.
காஸா சிட்டியை கைப்பற்றும் இஸ்ரேலின் கொடூர திட்டத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்வரும் அக்டோபர் 7ம் திகதிக்கும் மொத்த காஸாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொக்கரித்துள்ளார்.
இதனிடையே, பாலஸ்தீனியர்களை கூட்டமாக வெளியேற்றும் நடவடிக்கை எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்தக் கருத்தும் இல்லை என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
ஆனால் காஸாவை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்தை இறுதி செய்வதற்கான விவாதங்களை தற்போது முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இதனிடையே, மக்கள் தொகையில் 90 சதவீதமான 1.9 மில்லியன் காஸா மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது. இரண்டாவது ஆண்டில் தொடரும் காஸா மீதான போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 61,000 கடந்துள்ளது.
காஸாவில் உள்ள 80 சதவீத கட்டுமானங்கள் மொத்தமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்ந்து வருகிறது. இதனிடையே, காஸா போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே நெதன்யாகு பாலஸ்தீன மக்களை கொன்று குவிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி புதிதாக தொடங்கவிருக்கும் தாக்குதல் நடவடிக்கை காஸாவில் எஞ்சியுள்ள 50 பணயக்கைதிகளை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் என்று பணயக்கைதிகளின் குடும்பங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.