காசாவில் உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் கொலை

16 ஆவணி 2025 சனி 20:28 | பார்வைகள் : 195
காசாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தற்போது வரை உணவு மற்றும் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த, 1760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 27 ஆம் திகதி முதல் கடந்த 13 ஆம் திகதி வரை, 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஓகஸ்ட் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் சபை, அறிவித்த இறப்பு எண்ணிக்கை 1373 ஆக இருந்த நிலையில், கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேல் 15-08-2025 நடத்திய தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிக்க தங்கள் படைகள் செயல்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.