தரமான தயாரிப்பு; குறைந்த விலை! : மோடி

17 ஆவணி 2025 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 106
வரலாற்றை எழுத வேண்டிய நேரமிது. தரமான பொருட்களுடன் உலக சந்தையை நாம் ஆள வேண்டும். 'குறைந்த விலை; அதிக தரம்' என்ற தாரக மந்திரத்துடன், உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து பயன்படுத்துவோம்.
உலகளவில் பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. அந்த சுயநலவாதிகளை நாம் கண்டுகொள்ள வேண்டாம். முன்னேறிச் சென்று, இலக்கை அடைய வேண்டிய நேரமிது,'' என, சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது. செங்கோட்டையில், 12வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
இதன் பின், பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரை: வரலாற்றை எழுத வேண்டிய நேரமிது. உலக சந்தையை நாம் ஆள வேண்டும். உற்பத்தி செலவுகளை குறைத்து, தரமான பொருட்களுடன் உலக சந்தைகளில் நம் திறமையை நிரூபிக்க வேண்டும். 'குறைந்த விலை; அதிக தரம்' என்ற தாரக மந்திரத்துடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
உலகளவில் பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. அந்த சுயநல நாடுகளை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். முன்னேறிச் சென்று, இலக்கை அடைய வேண்டிய நேரமிது. நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்டது போல, வலுவான இந்தியாவை கட்டியெழுப்ப நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். இது தான் காலத்தின் தேவை. மற்றவர்களை இழிவுபடுத்துவதில் நம் சக்தியை வீணடிக்க வேண்டாம்.
கடந்த 10 ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தப்பட்டது. தற்போது பெரிய இலக்குகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் வணிகர்கள், கடைக்காரர்கள் உள்ளூர் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும்.
அரசு கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், எனக்கு தெரியப் படுத்துங்கள்.
விவசாயிகளுக்கு எதிரான எந்த கொள்கைகளையும், என் அரசு பொறுத்துக் கொள்ளாது. விவசாயிகளே நாட்டின் துாண்கள். நம் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. பிரச்னை என வந்து விட்டால், விவசாயிகளை கைவிட மாட்டேன். அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
தீபாவளி பரிசு: நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அதற்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்படும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது. சிந்து நதிநீர் இந்தியாவுக்கே சொந்தம். விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் செய்யப்படாது.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா இனி ஒருபோதும் அஞ்சாது. 'ஆப்பரேஷன் சிந்துார்' புதிய இந்தியாவின் இயல்பை பிரதிபலிக்கிறது. ஆயுதப்படைகளுக்கு நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்தோம்.
அதன் பலனை, ஆப்பரேஷன் சிந்துார் மூலம் உலகமே பார்த்து வியந்தது. இனி வரும் காலங்களில் இந்தியாவை சீண்டினால், மறக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
ஊடுருவல்: எல்லைப் பகுதிகளில் ஊடுருவல், சட்டவிரோத குடியேற்றம் காரணமாக மக்கள் தொகை ஏற்றத்தாழ்வின் ஆபத்துகளை கவனிக்க வேண்டி உள்ளது.
இந்த தேசிய பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும், உயர் அதிகாரம் கொண்ட மக்கள் தொகை தொடர் ஆய்வு இயக்கத்தை துவங்குகிறோம்.
உள்நாட்டில் தயாரிப்பு: நம் விமானப்படையின் போர் விமானங்களுக்கான இன்ஜினை உள்நாட்டிலே தயாரிக்க வேண்டும். இதை நம் விஞ்ஞானிகள், இளைஞர்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய நம்மால், இதையும் செய்ய முடியும்.
செமி கண்டக்டர் சிப்: இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமி கண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். அதே போல், ஏற்கனவே ஆறு செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகள் உள்ள நிலையில், மேலும் நான்கு புதிய அலகுகள் அமைக்கப்படும். 10 புதிய அணு உலைகளில் அணுசக்தி திறனை, 10 மடங்கு அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இது, அடுத்த 20 ஆண்டுகளுக்குள் நிறைவேறும்.
தற்சார்பு இந்தியா: தற்சார்பு இந்தியா என்பது வெறும் பொருளாதார முழக்கமல்ல. அது ராணுவ கேடயம் போன்றது. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையே, தற்சார்பு இந்தியாவுக்கு உதாரணம். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் இனி வெளிநாடுகளை சார்ந்திருக்க முடியாது.
சமுத்திர மந்தன்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு பெருமளவில் செலவிடப்படுகிறது. சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர் மின்சக்தி, அணுசக்தி ஆகியவற்றில் பெரிய விரிவாக்கங்களுடன், கடல் வளங்களைப் பயன்படுத்த, 'சமுத்திர மந்தன்' எனப்படும் தேசிய ஆழ்கடல் ஆய்வு திட்டம் துவங்கப்படும். இது எதிர்கால சந்ததியினருக்கு உதவும்.
வேலைவாய்ப்பு: 'விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி இளைஞர்கள் பயனடைவர்.
மிஷன் சுதர்ஷன் சக்ரா: பகவான் கிருஷ்ணரின் சக்தி வாய்ந்த ஆயுதமாக கருதப்படும், 'சுதர்ஷன் சக்ரா' பெயரில் புதிய வான் கவச பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில், இது பயன்பாட்டுக்கு வரும். இந்த திட்டம் வான் பாதுகாப்பு அம்சமாகவும், துல்லியமான எதிர் தாக்குதல் நடத்தும் திறன்களையும் கொண்டிருக்கும்.
விண்வெளி: விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை கட்ட இந்தியா உறுதிபூண்டுள்ளது. இத்துறையில் உலகளவில் முன்னணியில் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரம்: பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் நாட்டின் நிர்வாகத்தை நவீனமயமாக்க, 2047ம் ஆண்டுக்குள், 850 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை ஏற்படுத்த, சிறப்பு சீர்திருத்த நிர்வாக பணிக்குழு அமைக்கப்படும்.