Paristamil Navigation Paristamil advert login

ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: புதிய கோணத்தில் விசாரணை துவக்கம்

ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: புதிய கோணத்தில் விசாரணை துவக்கம்

16 ஆவணி 2025 சனி 08:12 | பார்வைகள் : 105


அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 13 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், டி.ஐ.ஜி., வருண்குமார் மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம், 2012 மார்ச் 29ம் தேதி, திருச்சி தில்லை நகரில் நடைபயிற்சி சென்றார். அவரை காரில் கடத்திச் சென்று, திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை என்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்தனர். அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. உடல் முழுதும் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டு இருந்தது.

இக்கொலை நடந்து, 13 ஆண்டுகள் ஆன போதிலும், கொலையாளிகள் யார்; திருச்சியில் மிக முக்கிய புள்ளியாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராமஜெயம் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து, திருச்சி மாநகர போலீசார் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளால் கூட துப்பு துலக்க முடியவில்லை.

தற்போது இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இக்குழுவில், எஸ்.பி., ஜெயகுமார் இடம்பெற்று இருந்தார். இவர், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டதால், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இதனால், விசாரணை அதிகாரிகளாக திருச்சி டி.ஐ.ஜி., மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி., ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. திருச்சி டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த வருண்குமார், சென்னையில் சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

ராமஜெயம் கொலை குறித்து, திருநெல்வேலி மாவட்டம், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சுடலைமுத்துவிடம், அவர் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அதன் அடிப்படையில், சுடலைமுத்துவின் கூட்டாளியான திருச்சி மணச்சநல்லுாரைச் சேர்ந்த ரவுடி குணா என்பவரிடம், நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கூறியதாவது:

திருச்சியில், ரவுடிகள் பிச்சமுத்து, முட்டை ரவி, மணல்மேடு சங்கர் ஆகியோர் அட்டூழியம் செய்து வந்தனர். போலீசார் நடத்திய 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். முட்டை ரவியின் மூளையாக செயல்பட்டவர் ரவுடி குணசீலன் என்ற குணா. இலங்கை தமிழரான இவர், மணச்சநல்லுார் குணா என, அழைக்கப்படுகிறார்.

தன் குருவான முட்டை ரவி, 'என்கவுன்டர்' செய்யப்பட்டதற்கு ராமஜெயம் தான் காரணம் என கருதினார். இதனால், ராமஜெயத்தை கொல்லாமல் விட மாட்டேன் என சபதம் எடுத்து செயல்பட்டு வந்தார்.

குணாவின் வலது கரம் தான், திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுந்தரபாண்டியன். இவர்களது 'டீம்' தான், புல்லட் மனோகர் என்பவரை கொலை செய்தது. இது, ராமஜெயம் கொலை பாணியிலேயே இருந்தது.

மேலும், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம், இலங்கையில் மடக்களப்பு பகுதியில் நடப்பது போலவே இருந்தது. இதனால், இவரின் கொலையில் இலங்கையைச் சேர்ந்தவர் பின்னணியில் இருப்பதாக, டி.ஐ.ஜி., வருண்குமார் முடிவுக்கு வந்துள்ளார். குணா, சுந்தரபாண்டியன், சுடலைமுத்து உள்ளிட்டோர் தான் ராமஜெயத்தை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், விசாரணை வளையத்தில், 13 ரவுடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். ராமஜெயம் வாயில் துணி ஒன்றும் திணிக்கப்பட்டு இருந்தது; இது காரில் தொங்க விடப்பட்டு இருந்த திரைச்சீலை என்பதும் உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்