சுன்னாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர் கைது - விசாரணையில் வெளிவந்த தகவல்

14 ஆவணி 2025 வியாழன் 14:37 | பார்வைகள் : 162
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் பகல் வீதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதை அவதானித்து அவரை மறித்து சோதித்த போது அவரது காற்சட்டை பொக்கற்றில் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள், பென்ரன்கள், இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவை சுன்னாகம் பகுதியில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகள் என தெரியவந்தது.
இதையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டபோது அங்கு பல நவீன கைத்தொலைபேசிகள், ஒரு தொகைப் பணம் இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரால், சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த
சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பெறுமதிமிக்க பொருட்களையும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.