தைவானில் போடூல் புயல் - 400 விமானங்கள் ரத்து

14 ஆவணி 2025 வியாழன் 11:40 | பார்வைகள் : 179
கிழக்கு சீனக்கடலில் உருவான ‘போடூல்’ புயல் தைவானில் கரையை கடந்தநிலையில் பெரும் சேதத்தை உண்டாக்கிய நிலையில் 400 விமனக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலு கொண்டது. இந்த புயலுக்கு ‘போடூல்’ என தைவான் பெயரிட்ட நிலையில் அந்த தீவின் தென்கிழக்கு கரையோரம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று போடூல் புயல் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் கரையை கடந்தது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அங்குள்ள கடற்கரை மாகாணங்களான தைதூங், ஹூவாலியன், பிங்டூங், யூன்லின் ஆகியவற்றை தாக்கியது.
இதனால் புயல் காரணமாக நகரங்கள் சின்னாபின்னமானதுடன் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியதால வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புயலில் சிக்கி மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.
அதேவேளை புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் இருந்து ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 130 சர்வதேச விமானங்களும், 300 உள்நாட்டு விமானங்களும் ரத்தாகின.
கடலோர பகுதிகளில் வசித்து வந்த 10 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அதேசமயம் புயல் காரணமாக ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சிலும் கனமழை கொட்டியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.