தமிழக புறவழிச் சாலைகளை பயன்படுத்துவோருக்கு இனி கட்டணம்!...

14 ஆவணி 2025 வியாழன் 06:36 | பார்வைகள் : 236
தமிழகத்தில் முக்கியமான புறவழிச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், சுங்க கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை பின்பற்றி, இந்த நடவடிக்கையை எடுக்க, மாநில நெடுஞ்சாலை ஆணையம் முன்வந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையால், 66,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், புறவழிச் சாலைகளும் அடக்கம். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், ஊரகம், நகரப் பகுதிகளுக்கு வெளியே புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதிக நிதி தேவை சரக்கு போக்குவரத்துக்கு புறவழிச் சாலைகள் பெரிதும் உதவிகரமாக உள்ளன. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகளவில் செல்வதால், புற வழிச் சாலைகள் அதிக ளவில் சேதமடைகின்றன.
வெள்ளம், புயல் போன்ற காலங்களிலும், இச்சாலைகளில் சேதம் அதிகரிக்கிறது. இவற்றை புனரமைக்க, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு அதிக நிதி தேவைப்படுகிறது.
மேலும், விபத்துக்களை கட்டுப்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் தரத்தில், இந்த சாலைகளையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல, மாநில அரசால் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, சாலைகளை மேம் படுத்தி, மாநில அரசின் நிதி நெருக்கடியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, பல்வேறு புறவழிச் சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை, தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதலாவதாக, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச்சாலை பராமரிப்பு மற்றும் சுங்க கட்டணம் வசூலிப்பு பணியை, 25 ஆண்டுகால குத்தகை அடிப்படையில், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, 2,000 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, நாமக்கல், இடைப்பாடி, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி - கரூர், அருப்புக்கோட்டை, பெரியகுளம் - ஆண்டிபட்டி உள்ளிட்ட, பல்வேறு புறவழிச் சாலைகளை, தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு அரசின் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் இறங்கியுள்ளது. இந்த சாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கும், சுங்க கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாக்குறுதி இதுகுறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்; சென்னை நகரப்பகுதியை ஒட்டியுள்ள, ஐந்து சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என, வாக்குறுதி கொடுத்துதான், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. நாங்களும் அதை நம்பி தான் ஓட்டு போட்டோம்.
இப்போது, புறவழி சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது. ஏற்கனவே, பல வகைகளில் வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளன.
இப்போது, சாலை பயணத்திற்கும் புதிதாக வரி விதிப்பது ஏற்க முடியாது. பா.ஜ., செய்தால், தவறு என்கின்றனர்; தி.மு.க., செய்தால் மட்டும் சரியா. சாலைகளை தனியாரிடம் ஒப்படைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது, மாநில அரசின் கொள்கை முடிவு. வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச்சாலை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ் சாலையின் ஒரு பகுதியாக, மாதவரம் ரவுண்டானா - நல்லுார் இடையிலான, 11 கி.மீ., சாலை உள்ளது.
அறிவிப்பு இந்த சாலையை, மாநில நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வந்துள்ளது. இதில் சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது. புற வழிச் சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, முறையான அறிவிப்பு வரும்.
தனியாரிடம் இருந்து சாலைகள் பராமரிப்பிற்கான நிதி ஆதாரத்தை பெற, மாநில நெடுஞ்சாலை ஆணையம் உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.