கணவர் கைதை தொடர்ந்து மேயர் ராஜினாமா; கலக்கத்தில் மதுரை தி.மு.க., கவுன்சிலர்கள்

14 ஆவணி 2025 வியாழன் 05:36 | பார்வைகள் : 262
மதுரை மாநகராட்சியில் நடந்த பல கோடி ரூபாய் சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதை தொடர்ந்து, மேயர் இந்திராணி ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார்.
இதற்கிடையே மேயர் வரை நடவடிக்கை பாய்ந்துள்ளதால், இவ்வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இம்மாநகராட்சியில் 2023, 2024ல், 150க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களுக்கு அதிகாரிகள் 'பாஸ்வேர்டை' பயன்படுத்தி சொத்து வரியை குறைத்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அ.தி.மு.க., புகார் எழுப்பியது. 2024ல் மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பலருக்கு தொடர்புள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநகராட்சியின் ஐந்து மண்டல, இரண்டு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பில் கலெக்டர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் என 19 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் உதவி கமிஷனர், ஓய்வுபெற்ற அதிகாரிகள், பில் கலெக்டர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தின் சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டது, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் என்பதை போலீசார் கண்டறிந்து, அவரை கைது செய்ய தீவிரமாகினர்.
இதையறிந்ததும், சென்னைக்கு சென்று பதுங்கினார். தகவல் போலீசாருக்கு தெரிய வர, சென்னை ஹோட்டலில் தங்கியிருந்த பொன் வசந்தை கைது செய்தனர்.
சென்னையில் இருந்து பொன் வசந்தை, மதுரைக்கு அழைத்து வரும் வழியில், தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பொன் வசந்த் தெரிவிக்க, அவரை பரிசோதனைக்காக மருத்துமனையில் சேர்த்துள்ளனர்.
கணவர் கைதையடுத்து, தன் மேயர் பதவியை ராஜினாமா செய்ய இந்திராணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொன் வசந்த் கைதை அடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
தன் கணவர் கைதானதை தொடர்ந்து, லோக்கல் அமைச்சரான தியாகராஜனை சந்தித்து உதவி கேட்க மேயர் இந்திராணி, அமைச்சர் வீட்டுக்கு சென்றுள்ளார். இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த அமைச்சர் தியாகராஜன், 'இந்த விஷயத்தில் என்னால் உதவ முடியாது; சட்ட ரீதியில் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள்' என சொல்லி, இந்திராணியை அனுப்பி உள்ளார்.