டொன்பஸ் பிராந்தியத்தை ரஸ்யாவிற்கு வழங்க முடியாது - உக்ரைன் ஜனாதிபதி உறுதி

13 ஆவணி 2025 புதன் 19:19 | பார்வைகள் : 225
டொன்பஸ் பிராந்தியத்தை ரஸ்யாவிற்கு வழங்கும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவுடனான யுத்த நிறுத்தத்திற்காக டொன்பஸ் பிராந்தியத்தை ரஸ்யாவிற்கு வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள அவர் ரஸ்யா அந்த பகுதியை எதிர்கால தாக்குதல்களிற்கான தளமாக பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை அமெரிக்க ரஸ்ய தலைவர்கள் அலாஸ்காவில் சந்திப்பதற்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நிலங்களை பரிமாறிக்கொள்வது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டொன்பஸ் பிராந்தியத்தை ரஸ்யாவிடம் உக்ரைன் ஒப்படைக்கவேண்டும் என்பதே புட்டினின் வேண்டுகோளாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதே டொன்பஸ் பிராந்தியம்.இதன் ஒரு பகுதியை 2014 முதல் ரஸ்யா ஆக்கிரமித்துள்ளது.
லுகான்ஸ்க்கின் பெரும்பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ரஸ்யா டொனெட்ஸ்க்கின் 70 வீதத்தினை தனது பிடியின் கீழ் வைத்துள்ளது.