Paristamil Navigation Paristamil advert login

சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு

சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு

13 ஆவணி 2025 புதன் 09:26 | பார்வைகள் : 805


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தங்கள் நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை விழா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு, ஜனவரியில் முடிவடையும் மகரவிளக்கு யாத்திரைக்காக கோவில் திறக்கப்படுகிறது. புனித யாத்திரை காலம் முடிந்ததும் சபரிமலை மூடப்படும். இந்த நிகழ்வுகளில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

இதை சிறப்பிக்கும் வகையில், இலங்கையின் அதிபராகியுள்ள அனுரா திசநாயகேவின் அமைச்சரவை, ஒரு முக்கிய முடிவு குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீண்ட காலமாக, இலங்கை பக்தர்கள், கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை மண்டல பூஜை விழா மற்றும் மகரவிளக்கு உள்ளிட்ட யாத்திரைகளுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்த அடிப்படையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் யாத்திரையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத பிணைப்பை அங்கீகரிக்கிறது. இனி சபரிமலை யாத்திரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாக கருதப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்