வருமான வரி மசோதாவில் புதிய வரி இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

13 ஆவணி 2025 புதன் 08:26 | பார்வைகள் : 718
புதிய வருமான வரி மசோதாவில் புதியதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை,'' என ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதன் பிறகு, இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுதும் அமலில் இருந்த வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகள் களையப்பட்டு, எளிமைப்படுத்திய வடிவில் புதிய வருமான வரி மசோதா - 2025 இயற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதாவை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்., 13ம் தேதி லோக்சபாவில் அறிமுகம் செய்தார். அப்போது, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததால், தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்ரீ பைஜெயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு, 4,575 பக்கங்கள் கொண்ட 285 பரிந்துரைகளை வழங்கியது. இதையடுத்து அனைத்து பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா மீதான விவாத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வருமான வரி சட்டத்தின் சில பிரிவுகள் காலாவதியாகிவிட்டன. இதனால், புதிய மசோதா தேவையாகிறது. புதிய மசோதாவை தயார் செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்தனர். தொடர்ந்து பகுப்பாய்வு செய்தனர். 1961 ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இம்மசோதா புதிய மைல்கல்லாகும். இம்மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
சிக்கல்களை எளிமையாக்க வருமான வரிச்சட்டங்களை மோடி அரசு எளிமையாக்கி உள்ளது. புதிய சட்டத்தில் புதிதாக எந்த வரிகளும் விதிக்கப்படவில்லை. பழைய சட்டத்தில், இருந்த சிக்கலான கட்டமைப்புகள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தின. மேலும் பல தவிர்க்கக்கூடிய சர்ச்சைகளை அதிகரித்து கொண்டே இருந்தது. இவ்வாறு அவர் பேசினார். இதன் பிறகு இம்மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின் சிறப்பம்சங்கள்
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும், அபராதம் செலுத்தாமல் டி.டி.எஸ்., எனப்படும் முன்கூட்டியே பிடித்த வரித் தொகை யை திரும்ப பெற முடியும்.
* பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த வார்த்தைகள், அத்தியாயங்கள், புதிய வருமான வரி சட்டத்தில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன.
* மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
* பழைய சட்டத்தில் முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'வரி ஆண்டு' என்ற வார்த்தை மட்டுமே இனி பயன்படுத்தப்படும்.
* எல்.ஐ.சி., ஓய்வூதிய நிதி போன்ற குறிப்பிட்ட நிதி திட்டங்களில் இருந்து கிடைக்கும் கணிசமான தொகைக்கு, இனி முழுமையாக வரி விலக்கு கிடைக்கும் குறு மற்றும் சிறு நிறுவனங்களின் வரி வரையறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.