முதல் பல்நோக்கு செயற்கை கோள்: தனியார் நிறுவனங்களுக்கு இன் ஸ்பேஸ் ஒப்புதல்

13 ஆவணி 2025 புதன் 06:26 | பார்வைகள் : 138
இந்தியாவில் முதல் பல்நோக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கி ஏவுவதற்கு, தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு இன்-ஸ்பேஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
இன்-ஸ்பேஸ் எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், இந்தியாவில் முதல்முறையாக பல்நோக்கு செயற்கைக்கோள்களை உருவாக்கி ஏவுவதற்கு, தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிக்சல்ஸ்பேஸ், பியர்சைட் ஸ்பேஸ், சாட்சூர் அனலிட்டிக்ஸ் இந்தியா மற்றும் த்ருவா ஸ்பேஸ் ஆகிய 4 தனியார் நிறுவனங்கள் அடங்கிய குழு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1200 கோடி முதலீட்டில் 12 பூமியை பற்றிய கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளன. இன் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற 20 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் 4 நிறுவனங்கள் தேர்வாகி உள்ளன.
பெங்களூருவைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான பிக்சல்ஸ்பேஸ் தலைமையிலான இந்திய கூட்டமைப்பு, இப்போது நாட்டின் முதல் முழுமையாக உள்நாட்டில் வணிக பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் தொடரை வடிவமைத்து, உருவாக்கி, இயக்கும்.
இது தொடர்பாக இன்-ஸ்பேஸ் நிறுவன தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது:
இந்தியாவின் தனியார் விண்வெளி முயற்சிகள் இப்போது முதிர்ச்சி அடைந்து வருகின்றன.
காலநிலை மாற்ற கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், உள்கட்டமைப்பு, கடல் கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றுக்கான அம்சங்களை இந்த செயற்கைக்கோள்கள் கொண்டிருக்கும், அதே நேரத்தில் உலகளாவிய தேவையையும் பூர்த்தி செய்யும்.
உயர் தெளிவுத்திறன் கொண்ட இந்த பணி, உள் நாட்டு செயற்கைக்கோள் தரவை உருவாக்கும், மேலும் இது, வெளிநாட்டு ஆதாரங்களை இந்தியா நம்பியிருப்பதை கணிசமாகக் குறைக்கும்.
இந்த முயற்சி விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் மற்றும் இந்திய தொழில்துறை விண்வெளி பொருளாதாரத்தில், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான நாடாக வெளிப்படுவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு பவன் கோயங்கா கூறினார்.