தேர்தல் தோல்வி பயமே தாயுமானவர் திட்டத்துக்கு காரணம்: நயினார் நாகேந்திரன்

12 ஆவணி 2025 செவ்வாய் 15:53 | பார்வைகள் : 129
சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தால் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்று திமுக அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி;
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தனர். அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். எத்தனை வருடம் கழித்து ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்? 2021ல் அறிவித்துவிட்டு, பார்லிமென்ட் தேர்தல் வரும் போது தான் கொடுத்தனர்.
இப்போது ஊர், ஊராக என்ன செய்கிறார்கள் என்றால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சொந்த கட்சிக்கு (திமுக) வேலை வாங்குகின்றனர். மூத்த அதிகாரிகளை கட்சி வேலைக்கு அனுப்புவதை பார்க்கும் போது எனக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர். நியமனம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளிகளில் கிடையாது. அதனால் தான் பள்ளிகள் குழந்தைகள் சேருவதே இன்று குறைந்திருக்கிறது.
2 நாட்களுக்கு முன்னர் தேசிய அளவில் ஒரு அறிக்கை வந்து இருக்கிறது. தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் கொடுத்து இருக்கின்றனர்.
தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜவினர் யாரும் இல்லை. அந்த மாநிலத்தில்(பீஹார்) 60 லட்சம் வாக்காளர்கள் இல்லை என்று சொல்றாங்க, 20 லட்சம் பேர் இறந்து போய்ட்டாங்க என்று சொல்றாங்க. 30 லட்சம் வாக்காளர்கள் வெளி ஊர்களில் இருக்கிறார்கள்.
ஆணவப் படுகொலை மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து படுகொலைகளாவது மாவட்டத்தில் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.
போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் கஞ்சா. இன்றைக்கு விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய்க்கு கஞ்சா பிடித்துள்ளனர். காவல்துறை சரியாக செயல்படவில்லை. சின்னஞ்சிறிய கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு இருக்கிறது.
ஆட்சிக்கு வந்து எத்தனை வருடம் ஆகிவிட்டது? இப்போது வந்து தாயுமானவர் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே? இன்றைக்கு திமுகவினர் தோல்வி பயத்தில் இருக்கின்றனர். அதனால் இதை எல்லாம் அவர்கள் செய்கின்றனர்.
நிச்சயம் அவர்கள் கூட்டணி 200 இடங்களில் தோற்கும். அதில் சந்தேகமே இல்லை. தோல்வி பயத்தால் எல்லா திட்டங்களையும் திமுகவினர் அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நாகர்கோயில் ஆகிய லோக்சபா தொகுதிகளின் கீழ் 30 சட்டசபை தொகுதிகள் வருகின்றன. திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை தவிர்த்துவிட்டு ஆக17ம் தேதி 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
இதை தொடர்ந்து, கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என்று கூறியபடி பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்தார்.
அப்போது நிருபர் ஒருவர், கூட்டணியில் இணைய ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், 'அதை பற்றி பிறகு பேசலாம்' என்று கூறிச் சென்றார்.