Paristamil Navigation Paristamil advert login

தெருநாய்களை அகற்ற உத்தரவு தமிழகத்திலும் அமலாகுமா?

தெருநாய்களை அகற்ற உத்தரவு தமிழகத்திலும் அமலாகுமா?

12 ஆவணி 2025 செவ்வாய் 12:53 | பார்வைகள் : 136


டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, தமிழகத்திலும் அமல்படுத்தும் வகையில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நம் மாநிலத்தில் நாய்கள் பயமின்றி மக்கள் நடமாடும் நல்ல நிலை உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தலைநகர் டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியங்களான உத்தர பிரதேசத்தின் நொய்டா, காஜியாபாத் மற்றும் ஹரியானாவின் குருகிராமில், சமீபகாலமாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

டில்லி சுகாதாரத் துறை தரவுகளின்படி, கடந்த ஜனவரி - ஜூன் வரையிலான காலத்தில் மட்டும், 49 பேர் 'ரேபிஸ்' தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாய்க்கடியால் ஏற்படும் இந்த தொற்றால், நம் நாட்டில் ஆண்டு தோறும், 20,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப் பதிந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, நீதிபதி ஆர்.மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை மட்டுமே நாங்கள் கேட்போம். விலங்கு நல ஆர்வலர்கள் அல்லது வேறு எந்த அமைப்பின் வாதத்தையும் கேட்க மாட்டோம். இதை, எங்களுக்காக செய்யவில்லை; பொதுமக்களின் நலனுக்காக செய்கிறோம்.

அதனால், இதில் எந்த உணர்வுகளுக்கும் இடம் தரக்கூடாது. நிலைமை மோசமடைந்து விட்டது; முடிந்தவரை விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியங்களில் உள்ள குடி யிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதன்பின், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கருத்து கேட்டனர்.

பதிலளித்த அவர், ''டில்லியில் தெருநாய்களை அடைக்க, குறிப்பிட்ட இடம் அடையாளம் காணப்பட்டது. ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள் தடை உத்தரவு பெற்றதால், அத்திட்டம் கைவிடப்பட்டது. மேலும், ஒரு சில நாட்களுக்கு தெருநாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து கொள்வர். அதன்பின் வெளியே விட்டு விடுவர்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வெறி நாய்க்கடியால் உயிரிழந்தவர்களை, இந்த விலங்குகள் நல ஆர்வலர்களால் மீண்டும் கொண்டு வர முடியுமா? தெருக்களை தெருநாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெருநாய்களை பிடிக்கும் போது அவற்றை தத்தெடுப்பதாகக் கூறி, யாரும் தடுக்கக் கூடாது.

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், எட்டு வாரங்களில் நாய்களுக்கான காப்பகங்களை அதிகாரிகள் அமைக்க வேண்டும். தெருநாய்களை அவற்றில் அடைக்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அவ்வப்போது, தகவல்களை அளிக்க வேண்டும்.

இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக்கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். மேலும் அவற்றுக்கு கருத்தடை தடுப்பூசி போட வேண்டும். நாய்களை ஒருபோதும் வெளியே விடக்கூடாது.

காப்பகங்களிலிருந்து நாய்கள் தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மேலும், நாய்க்கடி தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக உதவி எண்ணை அறிவிக்க வேண்டும். இதில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். தெருநாய்களை பிடிக்க தேவைப்பட்டால், பிரத்யேக சிறப்புப் படையை மாநகராட்சிகள் உருவாக்கலாம். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. தெருநாய்களை பிடிப்பதை யார் தடுத்தாலும், பாரபட்சமின்றி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு நாளுக்கு எவ்வளவு நாய்கள் பிடிக்கப்படுகின்றன, அவை எங்கு கொண்டு செல்லப்படுகின்றன உட்பட அனைத்து தகவல்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். இதை நாங்கள் சரி பார்ப்போம். மேலும், ரேபிஸ் தொற்றுக்கான தடுப்பூசி எங்கெல்லாம் கிடைக்கிறது என்ற விபரங்களை பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும். விசாரணை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரவின் முக்கிய அம்சங்கள்

1 குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும்

2 எட்டு வாரங்களுக்குள் நாய்களுக்கான காப்பகங்களை, அதிகாரிகள் அமைக்க வேண்டும்

3 காப்பகங்களில் நாய்களை பராமரிக்க, போதுமான ஊழியர்கள் இருக்க வேண்டும்

4 காப்பகத்தில் இருந்து நாய்கள் வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டும்

5 தெருநாய்களை பிடிக்கும் போது யாரும் தடுக்கக் கூடாது; தடுப்பவர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

   தமிழகத்திற்கும் பொருந்தும்' ஐகோர்ட் உத்தரவு

   மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர், 'சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க வேண்டும். சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 2020ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

 

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகபூப் பாசில் ஆஜரானார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

டில்லியில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். அதை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி, தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி, தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை உறுதி செய்ய, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்