Paristamil Navigation Paristamil advert login

கனடா நிலப்பரப்புக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்-ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கனடா நிலப்பரப்புக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்-ஆய்வாளர்கள்  எச்சரிக்கை

7 ஆவணி 2025 வியாழன் 19:26 | பார்வைகள் : 230


கனடாவை ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கக் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 

கனடாவின் யூகோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டாவ்சன் நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு அடியில், வரலாற்று யுகத்துக்கு முன், பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

 

அந்த நிலப்பரப்புக்கு அடியில் இருக்கும், நீண்ட காலமாக மறக்கப்பட்ட, நிலநடுக்கங்களை உருவாக்கக்கூடிய டின்டினா என்னும் நிலப்பிளவு, மிகப்பெரிய ஒரு நிலநடுக்கத்தை உருவாக்கக் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

 

அப்படி ஒரு நிலநடுக்கம் ஏற்படுமானால், அது ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவில் இருக்கும் என்றும், அது கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நிலநடுக்கமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

பூமிக்கு அடியிலுள்ள நகரும் நிலத்தட்டுகளின் அசைவால் ஏற்படும் அழுத்தத்தை சுமார் 12,000 ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கும் அந்த நிலப்பிளவு, அந்த அழுத்தத்தை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றும், அது நிலநடுக்கமாக வெடித்துக் கிளம்பும்போது உருவாக்கும் சேதம் பயங்கரமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிக்கிறார்கள்.

 

விக்டோரியா பல்கலை, ஆல்பர்ட்டா பல்கலை மற்றும் கனேடிய நிலவியல் ஆய்வுத்துறையின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்கள்.

 

ட்ரோன்கள், விமானங்களில் பொருத்தப்பட்ட LiDAR (Light Detection and Ranging) என்னும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த விடயங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் அவர்கள்.

உடனடியாக ஆபத்து வரைபடங்கள் மூலம் எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலிருக்கும் இடங்களைக் கண்டறிந்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, வடக்கில் வாழும் சமூகத்தினரை தயார்ப்படுத்தி, நிலநடுக்கத்திலிருந்து தப்ப, தக்க நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பேரழிவை கனடா சந்திக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்