ஒன்பது பிரதமர்கள், ஜனாதிபதிகளுடன் பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன்

1 ஆவணி 2025 வெள்ளி 08:45 | பார்வைகள் : 119
" சேர் டொனால்ட் ஜோர்ஜ் பிரட்மன் கிரிக்கெட் வரலாற்றில், உண்மையில் சகல பந்து விளயாட்டுக்களின் வரலாற்றில் எந்த கேள்விக்கும் இடமின்றிய மகத்தான ஒரு ஆளுமை." இவ்வாறுதான் பிரபல்யமான பத்திரிகையாளரும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியருமான மத்தியூ ஏஞ்செல் , விஸ்டென் கிரிக்கெட் நாட்காட்டியில் ( Wisden Cricketers' Almanack ) பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டொன் பிரட்மனை பற்ற குறிப்பிட்டார்.
'கிரிக்கெட்இன்ஃபோ' வின் (Cricketinfo ) பிரகாரம் "அவுஸ்திரேலியாவின் சேர் டொனால்ட் பிரட்மன் எந்த வாதத்துக்கும் அப்பால், இதுகாலவரையில் உலகம் கண்ட தலைசிறந்த துடுப்பாட்டவீரரும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கிரிக்கெட் வீரருமாவார்."
டொன் பிரட்மன் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிக்கெட் உலகில் ஒரு பிரமாண்டமான ஆளுமையாக உலாவந்தவர். 1930 ஜனவரியில் குயின்ஸ்லாந்துக்கு எதிராக நியூசவுத் வேல்ஸுக்காக விளையாடியபோது எவராலும் முறியடிக்க முடியாத 452 ஓட்டங்களைப் பெற்ற பிறகு அவர் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் கிரிக்கெட் இரசிகர்களின் ' வாழ்த்துப் பானத்துக்கு ' ( Toast of cricket lovers) உரியவராக மாறினார். முதல்தரமான கிரிக்கெட்டில் ஒரு இனிங்ஸில் மிகவும் அதிகமான ஓட்டங்களாக அன்று ஒரு உலக சாதனையாக அந்த ஓட்டங்கள் விளங்கின.
பிரட்மன் கிரிக்கெட் விளையாட்டில் தனது முத்திரையைப் பதித்தபோது இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை ஏற்றிக்கொண்டு " ஒக்ஸ்போர்ட் " கப்பல் 1930 ஏப்ரில் 2 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்த போது இலங்கையில் பெரும் பரபரப்பு. உண்மையில், டொன் பிரட்மனே நட்சத்திரக் கவர்ச்சிக்குரியவராக விளங்கினார்.
1930 ஏப்ரில் 3 ஆம் திகதி மெயிற்லண்ட் பிளேஸில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ( Colombo Cricket Club -- CCC) மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக விளையாடியது.
அதுவே 22 வயதான டொன் பிரட்மன் அவுஸ்திரேலியாவுக்கு வெளியே விளையாடிய முதலாவது கிரிக்கெட் போட்டியாகும். மிகவும் திறமையாக விளையாடி ஓட்டங்களை குவித்து அவர் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தார். நீல் ஜோசப் பந்து வீச அழைக்கப்பட்டபோது பிரட்மன் 40 ஓட்டங்களை எடுத்திருந்தார். பழைய றோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரான ஜோசப் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது பந்து வீச்சில் பிரட்மனை ( Hit wicket ) ஆட்டமிழக்கச் செய்தார்.
இங்கிலாந்தில் அவுஸ்திரேலிய அணி குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியை பெற்றது. ஆஷஸ் என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியில் ஐந்து டெஸ்ட் தொடர்களில் 2/1 வெற்றியை அவுஸ்திரேலியா பெற்றது. அந்த கிரிக்கெட் சுற்றுலாவில் டொன் பிரட்மன் கிரிக்கெட்டில் வரலாறு படைத்தார். டெஸ்ட் தொடரில் அவர் 974 ஓட்டங்களை குவித்தார். 8, 131, 254, 1, 334, 14 , 232 என்று அவரின் ஓட்ட எண்ணிக்கை அமைந்திருந்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஹெடிங்லே பிரட்மன் 309 ஓட்டங்களை பெற்றார். அவரது இறுதி ஓட்ட எண்ணிக்கை 334 ஆகும். அதன் மூலம் முன்னைய டெஸ்ட் சாதனையை (287) அவர் முறியடித்தார். அந்த சுற்றுலாவில் டொன் பிரட்மனும் 2960 ஓட்டங்களை குவித்தார்.
டொன் பிரட்மனின் இந்த சாதனைகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளியாகின. இலங்கையில் கிரிக்கெட் இரசிகர்கள் அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள். ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் 1930 அக்டோபர் 28 " ஒறொன்சே" கப்பல் மூலமாக அவுஸ்திரேலியா திரும்பினர். மேற்கு அவுஸ்திரேலியாவின் ஃபிறெமென்ரல் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் அந்த கப்பல் 1930 அக்டோபர் 20 ஆம் திகதி கொழும்பில் தரித்து நின்றது. பிரட்மனை பாராட்டவும் சாத்தியமானால் அவரை பார்ப்பதற்கும் துறைமுகத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினர். பிரட்மன் கொழும்புக்கு வருகை தந்தது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் விபரமாக வெளியாகின.
"பிரட்மன்மேனியா" சூழ்நிலை
இத்தகைய " பிரட்மன்மேனியா" சூழ்நிலையில் பிரட்மனையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் ஏற்றிக்கொண்டு " ஒறொன்சே " கொழும்பு துறைமுகத்துக்கு வந்த அதே தினமே (அக்டாபர் 20 ) கொழும்பில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
அதன் பெற்றோர் டொன் பிரட்மனின் தீவிர இரசிகர்கள். அதனால் அவர்கள் புதிதாக பிறந்த தங்கள் மகனுக்கு புகழ்பெற்ற அந்த கிரிக்கெட் ஜாம்பவானின் பெயரைச் சூட்டினர்.
பிரட்மனின் பெயரைக் கொண்ட அந்த பையன் தனது பாடசாலை நாட்களில் ' ஃபெஸ்ட் லெவினுக்காக ' விளையாடிய போதிலும், கிரிக்கெட்டில் சர்வதேசப் புகழைப் பெறவில்லை. ஆனால் , அவன் வளர்ந்து இலங்கையின் ஒன்பது பிரதமர்கள், ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றிய தலைசிறந்த சிவில் சேவை அதிகாரியாக பிரபலமானான்.
2025 ஜூலை 7 ஆம் திகதி தனது 94 வயதில் காலமான பிரட்மன் வீரக்கோனை பற்றியே நான் உண்மையில் குறிப்பிடுகிறேன். பிரட்மன் என்று பொதுவாக அறியப்பட்ட அவர் இலங்கை பல்கலைக்கழகத்தில் ( பேராதனை ) இருந்து படடதாரியாக வெளியேறி மிதிப்புமிக்க இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார். அவர் அரசாங்க அதிபர், பிரதமரின் நிரந்தரச் செயலாளர், அந்தரங்கச் செயலாளர், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், ஜனாதிபதியின் ஆலோசகர் போன்ற பல பதவிகளை ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் வகித்தார். பிரட்மன் வீரக்கோன் ' சர்வதேச திட்டமிட்ட பெற்றோர்ப்பருவ சம்மேளனத்தின் (Internatiinal Planned Parethood Federaration -- IPPF) செயலாளராகவும் இரு தடவைகள் பதவி வகித்தார்.
வீரகேசரி
பத்திரிகையாளர் என்ற துறைசார் அந்தஸ்தில் நான் பிரட்மன் வீரக்கோனுடன் ஒரு சில வருடங்கள் ஊடாட்டத்தைச் செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன். ' வீரகேசரி ' தமிழ்ப் பத்திரிகையில் அலுவலக நிருபராக 1977 ஏப்ரிலில் நான் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்தேன். அந்த வருடம் ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜூனியஸ் றிச்சர்ட் (ஜே.ஆர்.) ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 141 ஆசனங்களைக் கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தது.
பெருந்தோட்டத்துறை
அந்த நாட்களில் செய்திப் பத்திரிகைகளின் நிருபர்களுக்கு அவர்களது கிரமமான கடமைகளின் ஒரு பகுதியாக செய்தி சேகரிப்பதற்கு விசேடமாக அமைச்சுக்கள் ஒதுக்கப்படும். நான் கையாளவேண்டிய அமைச்சுக்களில் ஒன்று பெருந்தோட்டத்துறை அமைச்சு. கொட்டாவ தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம்.டி.எச். ஜெயவர்தன அமைச்சர். அவரது பிரதியமைச்சர் மாத்தளை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான அலிக் அலுவிகார. பெருந்தோட்டத்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பிரட்மன் வீரக்கோன்.மேலதிக செயலாளர் கலாநிதி பி.ஜி. புஞ்சிஹேவ.
வீரகேசரியைப் பொறுத்தவரை, பெருந்தோட்டத்துறை அமைச்சு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. முன்னணி தமிழ்ப் பத்திரிகையான அதற்கு மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெருமளவு வாசகர்கள்.அதனால் அந்த அமைச்சுடன் தொடர்புடைய செய்திகளை முழுமையாக கையாளுமாறு என்னிடம் கேட்கப்பட்டது. செயலாளர் வீரக்கோனும் மேலதிக செயலாளர் புஞ்சிஹேவவும் மிகுந்த பண்பாளர்கள். என்னுடன் அன்பாதரவாகப் பழகிய அவர்களை சந்திப்பது இலகுவாக இருந்தது. பழம்பெரும் தொழிற் சங்கவாதியான கே.சி. நித்தியானந்தாவை தலைவராகக் கொண்டு பனை அபிவிருத்திச்சபை அமைக்கப்படுவது பற்றிய செய்தியை மற்றைய பத்திரிகைகளை முந்திக்கொண்டு முக்கிய செய்தியாக நான் எழுதியது எனக்கு இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது.
அந்த கட்டத்தில் பிரட்மன் வீரக்கோனுடன் முதற்தடவையாக நான் பழகத் தொடங்கினேன். அந்த நாட்களில் அவருடன் நான் கிரமமாக தொடர்பில் இருந்தேன். அலுவலக நேரங்களில் ஊடகங்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு அவர் விரும்புவதில்லை என்பதை விரைவாகவே அறிந்துகொண்டேன். அப்போது கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த பெருந் தோட்டத்துறை அமைச்சுக்கு கடமை நேரம் முடியும் தறுவாயில் நான் சென்று தனிப்பட்ட முறையில் பிரட்மன் வீரக்கோனைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அந்த வேளைகளில் அவர் தாராளமாகப் பேசுவார். சில சந்தர்ப்பங்களில் தனது வாகனத்தில் என்னை ஏற்றி சம்பாஷணையை தொடருவார்.
' தி ஐலண்ட் '
1980 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத்துறை அமைச்சில் இருந்து விலகி பிரட்மன் வீரக்கோன் அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் செயலாளராக வந்தார்.பிரதமரின் அலுவலகம் அல்லது அவரின் பொறுப்பில் இருந்த அமைச்சுக்கள் பற்றி செய்திகளைச் சேகரிப்பது எனது கடமையாக இருக்கவில்லை என்பதால், பிரட்மனுடன் மேற்கொண்டு தொடர்பு கொள்ளாமல் விட்டு விட்டேன். 1981 ஆம் ஆண்டில் ' தி ஐலண்ட்' பத்திரிகை மூலமாக நான் ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தேன்.
மாவட்ட அபிவிருத்திச் சபை
'தி ஐலண்ட் ' பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு பத்திரிகையாளராக நான் நான் பிரட்மன் வீரக்கோனுடன் பழகத் தொடங்கினேன். ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கும் இடையில் அப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாவட்ட சபைகளை புதுப்பிப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதே அந்த கிரமமான பேச்சுவார்த்தைகளின் குறிக்கோளாகும். பிரட்மன் வீரக்கோன் அந்த கூட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார்.
அரசியல் நிறைவேற்று அதிகார பீடத்திடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று அதன் பிரகாரம் செயற்பட்ட ஒரு அரசாங்க அதிகாரியாக மாத்திரமே பிரட்மன் செயற்பட்டபோதிலும் கூட, அந்த கூட்டங்களில் அவர் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார். இனநெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருந்தது குறித்து அவர் மிகுந்த கவலையடைந்தார். அதிகப் பெரும்பானமையான தமிழ் மக்கள் ' தமிழீழத்துக்காக ' வாக்களித்தார்கள் என்று அவர் என்னிடம் கூறுவார். பிரிவனைவாதப் போக்குகளைக் கட்டுப்படுத்துமுகமாக அர்த்தமுடைய மாற்று திட்டம் ஒன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அவர் வலியுறுத்துவார். மாவட்ட சபைகள் உகந்த முறையில் செயற்படக் கூடியதாக இருக்குமானால் ஒரு தீர்வை வழங்கமுடியும் என்று பிரட்மன் நினைத்தார். துரதிர்ஷ்டவசமாக, அது ஒருபோதும் நடைபெறவில்லை.
1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களை தொடர்ந்து நிலைவரம் மேலும் மோசமாகியது. அது ஒரு குழப்பகரமான ஒரு நிலைவரமாக இருந்தது. கறுப்பு ஜூலைக்கு பிறகு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரட்மன் வீரக்கோன் நியமிக்கப்பட்டார். அவர் தனது கடமைகளை மிகுந்த செயற்திறனுடன் நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது அவருடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டிருந்தேன். நடந்தவை குறித்தும் நடந்துகொண்டிருநதவை குறித்தும் பிரட்மன் பெரும் விரக்திக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகியிருந்தார் அவருடன் பேசியபோது உணர்ந்துகொண்டேன்.
சமாதான முயற்சிகள்
நான் 1988 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டேன். பிரட்மனுடனான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. பல வருடங்களுக்கு பிறது 2001 ஆம் ஆண்டில் பிரதமராக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரட்மன் பணியாற்றத் தொடங்கியதையடுத்து அவருடன் மீண்டும் தொடர்புகொண்டேன். ரணில் விக்கிரமசிங்க நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலை புலிகளுடன் சமாதான முயற்சியொன்றை தொடங்கினார். நான் அப்போது ரொறண்டோவில் இருந்து ' த சண்டே லீடர் ' பத்திரிகைக்கு எழுதிக் கொண்டிருந்தேன். சமாதான முயற்சிகள் தொடர்பாக பிரட்மனுடன் நான் தொடர்பில் இருந்தேன். அதுவும் 2004 ஆண்டில் முடிவுக்கு வந்தது.
அதற்கு பிறகு பிரட்மன் வீரக்கோனுடன் ஒரு தடவை மாத்திரம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினேன். அது அவர் தனது 80 வது பிறந்ததினத்தை கொண்டாடிய நேரம். ' டெய்லி ஃபைனான்சியல் ரைம்ஸ் ' பத்திரிகைக்காக மேறியன் டேவிட் அவரை பேட்டி கண்டார். எனது வலைத்தளத்தில் அந்த பேட்டியை நான் மறுபிரசுரம் செய்தேன். அது குறித்து பிரட்மன் மகிழ்ச்சியடைந்தார்.
இறுதிச் சம்பாஷணை
அப்போது பிரட்மனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் நீண்ட நேரம் பேசினேன். அலிகம்பை குறவர் தொடக்கம் ஜனாதிபதி பிரேமதாசவின் விதிவசமான உதவியாளன் மொஹிதீன் வரை ஏராளமான விடயங்களைப் பேசினோம். அதுவே பிரட்மனின் குரலை நான் இறுதியாகக் கேட்ட தருணம்.
கல்வி
பிரட்மன் றொபின் வீரக்கோன் கொழும்பில் 1930 அக்டோபர் 20 ஆம் திகதி பிறந்தார். அவரது பெற்றோர் களுத்துறையில் பையாகலையைச் சேர்ந்தவர்கள். பிரட்மனின் தந்தையார் எட்மண்ட் ஒரு பொலிஸ் அதிகாரி, தாயார் எடித் ஒரு பாடசாலை ஆசிரியை. இளம் பிரட்மன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹொலி குறொஸ் கல்லூரியில் பெற்றார். இரண்டாம் நிலைக் கல்விக்காக அவர் கல்கிசையில் கடற்கரையோரமாக இருந்த பாடசாலைக்கு மாறினார். இரண்டாவது உலகப்போர் தொடங்கி தீவிரமடைந்ததை அடுத்து பிரடமன் கிரித்தலாவவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சென். தோமஸ் கல்லூரிக்கு சென்றார். மூனாறாம் நிலைக்கல்வியை பேராதனையில் இலங்கை பல்கலைக்கழகத்தில் பெற்ற அவர் பொருளாதாரத்திலும் சமூகவியலிலும் கலைமாணி பட்டதாரியாக வெளியேறினார்.
இலங்கை சிவில் சேவை
அதற்கு பிறகு பிரட்மன் மதிப்புமிக்க இலங்கை சிவில் சேவைப் பரீட்சைக்கு தோற்றி மிகவும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். சிவில் சேவையில் இணைந்த அவர் அநுராதபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் அரசாங்க அதிபர்களின் கீழ் கடேற் அதிகாரியாக பணியாற்றினார்.1954 ஆம் ஆண்டில் பிரட்மன் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவுக்கு உதவிச் செயலாளராக நியமிக்கப்படாடார். 1955 ஆம் ஆண்டில் அவர் பிரதமர் கொத்தலாவலவின் செயலாளராக வந்தார்.
பிரட்மன் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 வரை பிரதமர்கள் டபிள்யூ. தஹநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க , டட்லி சேனநாயக்க ஆகியோருக்கு செயலாளராக பணியாற்றினார். அடுத்தடுத்து பதவிக்கு வந்த வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதமர்களுக்கு ஏற்புடையவராக பிரட்மன் விளங்கியமை அவரது நேர்மை, செற்திறன் மற்றும் பக்கச்சார்பற்ற அணுகுமுறைக்குரிய மதிப்பாகும்.
அரசாங்க அதிபர்
ஆனால், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான 1970 ஐக்கிய முன்னணி அரசாங்கம் பிரட்மனை கொழும்பில் பிரதமர்களின் " அதிகாரக் கூடங்களில் " இருந்து கிழக்கில் நிருவாக சேவை " வனாந்தரத்துக்கு " அனுப்பியது. முதலில் மட்டக்களப்பிலும் அடுத்து அம்பாறையிலும் அவர் அரசாங்க அதிபராக பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் கீழ் பிரட்மன் பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளராக வந்தார்.
பிரேமதாச
1980 ஆம் ஆண்டில் பிரட்மன் மீண்டும் ஒரு தடவை தனக்கு பரிச்சயமான பணிக்கு திரும்பினார். பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின செயலாளராக வந்த அவர் 1983 ஆம் ஆண்டில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார் பிரேமதாச 1888 ஆண்டில் ஜனாதிபதியாக வந்தபோது அவரின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக பிரட்மன் நியமிக்கப்பட்டார். பிரேமதாச கொல்லப்பட்டதை அடுத்து ஜனாதிபதியாக பதவிக்கு வந்த டி.பி. விஜேதுங்கவின் ஆலோசகராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
விக்கிரமசிங்க
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கீழான ' சகவாழ்வு அரசாங்கத்தின் ' பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 2001 ஆண்டில் வந்தபோது ஓய்வில் இருந்த பிரட்மனை மீண்டும் சேவைக்கு கொண்டு வந்தார். 2004 ஆம் ஆண்டில் ரணில் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்படும் வரை, பிரட்மன் பிரதமரின் செயலாளராக பணியாற்றினார்.
முக்கியமான நிகழ்வுகள் நிறைந்த தனது சேவைக்காலத்தில் பிரட்மன் வீரக்கோன் இரண்டு தடவைகள் லண்டனில் திட்டமிட்ட பெற்றோர்ப்பருவ சம்மேளனத்தின் செயலாளர் நாயகமாக பணியாறாறினார். முதலில் 1976 ஆம் ஆண்டிலும் பிறகு 1984 ஆம் ஆண்டிலும் அந்த பதவியை அவர் வகித்தார். ஃபுல்பிறைட் புலமைப்பரிசிலையும் பெற்ற பிரட்மன் அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகவியலில் முதுமாணி பட்டத்தைப் பெறுவதற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டார்.
மூன்று நூல்கள்
மகிழ்ச்சிநிறைந்த தனது ஓய்வுகாலத்தின் பெரும்பகுதியை வாசிப்புக்கும் பிரட்மன் ஆயவுக்கும் எழுத்துக்கும் பயன்படுத்தினார். நான் அறிந்தவரையில் அவர் நினைவில் நிலைக்கத்தக்க மூன்று நூல்களை எழுதினார். ஒரு நூல் அவரின் சொந்த மாவட்டமான பஸ்தூன் கோறளே என்று அறியப்பட்ட களுத்துறையை பற்றியது. பிரட்மன் பையாகலையைச் சேர்ந்தவர். அடுத்த நூல் ரணசிங்க பிரேமதாசவை பற்றியது.பிரேமதாசவின் பண்புகளில் சிலவற்றை பிரட்மன் மிகவும் மெச்சினார். மூன்றாவது நூல் அவர் ஒன்பது பிரதமர்கள், ஜனாதிபதிகளுடன் பணியாற்றிய காலத்தின் நினைவுகள் பற்றியதாகும். இதுவே மூன்று நூல்களிலும் மிகவும் பிரபல்யமானதாக விளங்கியது.
பிரட்மனின் பெற்றோர் அங்கிளிக்கன் மதத்தைச் சேர்ந்தவர்கள். பிரட்மனும் கூட கிறிஸ்தவராகவே ஞானஸ்நானம் செய்யப்பட்டார் என்றாலும் அவர் தனது பதினகவைகளின் பிற்பகுதியில் புத்தரின் போதனைகளை பின்பற்றுபவராக மாறிவிட்டார். ஆனால், தனது சரிதை நூலுக்கு 'Rendering Unto Caesar' என்று வைத்த தலைப்பு பைபிளில் இருந்து பெறப்பட்டது. " அரசருக்கு உரியதை அரசருக்கு கொடு.கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடு" ( Rendering unto Caesar the things that are Caesar's, and unto God the things that are God's) என்று இயேசு கிறீஸ்து கூறிய சம்பவம் ஒன்று நற்செய்தியில் பதிவாகியிருக்கிறது. இது சாராம்சத்தில் இலங்கையின் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் வடிவில் பின்னாளில் வந்த ஒன்பது " அரசர்களுடன்" பணியாற்றிய பிரட்மனின் அனுபவங்களின் ஒரு தொகுப்பேயாகும்.
எசல வீரக்கோன்
பிரட்மனின் மனைவி தமயந்தி குணசேகர 2007 ஆம் ஆண்டில் காலமானார். அவர்களது ஒரே மகன் எசல இலங்கை வெளியுறவுச் சேவையில் ஒரு இராஜதந்திரியாக பணியாற்றினார். எசல வீரக்கோன் தூதுவராக, உயர்ஸ்தானிகராக, வெளியுறவு அமைச்சின் செயலாளராக, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகமாக பணியாற்றினார்.
பிரதமர்களும் ஜனாதிபதிகளும்
பிரட்மன் உயிருடன் இருந்திருந்தால் இவ்வருடம் அக்டோபரில் தனது 95 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்துவிட்டது. பிரட்மன் உயர்ந்தோர் குழாமைச் சேர்ந்த இலங்கை சிவில் சேவை கடைசி அதிகாரிகளில் ஒருவர். அவர் ஒரு மகத்தான மனிதர். பிரதமர்களுடனும் ஜனாதிபதிகளுடன் பணியாற்றினார். ஆனால், பிரட்மன் தனது நாட்டின் மீதும் மக்கள் மீதம் பெரும் அக்கறையும் அன்பும் கொண்டவர்.
நன்றி வீரகேசரி
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025