ஈரானின் புதிய அச்சுறுத்தல்... ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பதிலடி

1 ஆவணி 2025 வெள்ளி 07:45 | பார்வைகள் : 317
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தனிநபர்களை குறிவைத்து ஈரானிய உளவுத்துறையினர் நடத்தும் படுகொலை, கடத்தல் மற்றும் துன்புறுத்தல் சதித்திட்டங்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவும் அதன் 13 நட்பு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மக்களைக் கொல்லவும், கடத்தவும், துன்புறுத்தவும் ஈரானிய உளவுத்துறையின் முயற்சிகளை எதிர்ப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம், இது எங்கள் இறையாண்மையை தெளிவாக மீறுவதாகும் என்று பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
மட்டுமின்றி, அல்பேனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், ஈரானிய அதிகாரிகளை இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளன.
மேலும், சர்வதேச குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, பிரித்தானியாவில் தனிநபர்களைக் கடத்த அல்லது கொல்ல ஈரானுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சதித்திட்டங்களை முறியடித்துள்ளதாக பிரித்தானியா அம்பலப்படுத்தியுள்ளது.
இதில் பிரித்தானியப் பிரஜைகள் மற்றும் மற்றவர்களை ஈரான் அச்சுறுத்தல்களாகக் கருதுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அக்டோபர் மாதம், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் தொடர்ச்சியான படுகொலை முயற்சிகள் மற்றும் கடத்தல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
மார்ச் மாதத்தில், ஈரானின் உளவுத்துறை சேவைகளின் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான நடத்தையைக் காரணம் காட்டி, அனைத்து அரசியல் செல்வாக்கு நடவடிக்கைகளையும் ஈரானிய அரசு பதிவு செய்ய வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025