Paristamil Navigation Paristamil advert login

மேகதாது அணை கட்டும் பணிகள் ஆரம்பித்துவிட்டோம்: கர்நாடகா அறிவிப்பு

மேகதாது அணை கட்டும் பணிகள் ஆரம்பித்துவிட்டோம்: கர்நாடகா அறிவிப்பு

2 ஆடி 2025 புதன் 09:29 | பார்வைகள் : 172


மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை துவங்கிவிட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறி உள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகா தீவிரமாக உள்ளது.ராமநகர் மாவட்டம், மேகதாது என்னும் இடத்தில் இந்த அணை கட்டப்பட இருக்கிறது.

இந்த அணை கட்டப்பட்டால் பெங்களூரு, ராமநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது, உபரிநீர் வீணாகாமல் தடுக்கப்படும் என்பது கர்நாடகாவின் வாதம். இதற்காக அம்மாநில அரசு ரூ.1000 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளது.

ஆனால், அணை கட்ட தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந் நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கி விட்டதாக கர்நாடகா துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

மாநிலத்தில் தற்போது 6 சதவீதம் பாசன பகுதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரிநீரை பயன்படுத்தி, விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்டும் அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அணை கட்டுமான பணிகளுக்காக நிலம் கணக்கீட்டு பணிகள் நிறைவு பெற்று, கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது, குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்