Paristamil Navigation Paristamil advert login

போலீஸ் பிடியில் காவலாளி பலிக்கு..அரசே பொறுப்பு : ஐகோர்ட் கண்டனம்

போலீஸ் பிடியில் காவலாளி பலிக்கு..அரசே பொறுப்பு : ஐகோர்ட் கண்டனம்

2 ஆடி 2025 புதன் 07:29 | பார்வைகள் : 204


சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக, மதுரை நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்திற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவகாசி வழக்கறிஞர் மாரீஸ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரின் காரிலிருந்த நகை திருடு போனது.

கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை, ஜூன் 27ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். தமிழகம் முழுதும், 2021 முதல் தற்போது வரை 25 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர்.

அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். எய்ம்ஸ் டாக்டர்கள் குழு மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும். வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதுபோல மேலும் சில மனுக்கள் தாக்கலாகின. மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பு தெரிவித்ததாவது:

நகையை இழந்த பெண் வாய்மொழியாக அளித்த புகாரில், அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வழக்கு பதியவில்லை. அவரை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்; கடுமையாக தாக்கினர். அவர் தப்பி ஓட முயன்றதாகவும், வலிப்பு வந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் போலீசார் கூறுகின்றனர். அங்கு அறிவுறுத்தியபடி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியில் அஜித்குமார் இறந்து விட்டதாக கூறியுள்ளார். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சமரச பேச்சு


தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் சேங்கைமாறன், மகேந்திரன் உள்ளிட்ட சிலர், மானாமதுரை டி.எஸ்.பி.,யுடன் திருப்புவனத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு வந்தனர். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், '50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்' என சமரசத்தில் ஈடுபட்டனர்.

நகையை இழந்த பெண், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் உறவினர். அந்த அதிகாரியின் அழுத்தம் காரணமாகவே, அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மரணம் தொடர்பாக விசாரிக்க வந்த திருப்புவனம் மாஜிஸ்திரேட்டை சிலர் தடுத்தனர்.இவ்வாறு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின், அஜித்குமாரை போலீசார் தாக்கியது தொடர்பான வீடியோ, அவரது உடலில் இருந்த காயங்கள் தொடர்பான படங்களை சமர்ப்பித்தனர். அதை நீதிபதிகள் பார்த்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:

தனிப்படை போலீசார் ஏன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார். திருட்டு வழக்கில் விசாரிக்க போலீசாருக்கு தான் உரிமை உள்ளது; எதற்கு தாக்கினர். குற்றம் சாட்டப்பட்ட நபர் வேறு இடத்தில் இருந்தால், தனிப்படை விசாரிக்கலாம். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போது ஏன் தனிப்படை விசாரிக்க வேண்டும்.

அரசு தரப்பு பதில்: நகை திருட்டு புகார் தொடர்பாக, அதை பெற்றுக் கொண்டதற்கு உடனடியாக மனு ரசீது வழங்கப்பட்ட பின், வழக்கு பதியப்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி., உத்தரவின்படி ஏற்கனவே தனிப்படை இயங்குகிறது; அவர்கள் விசாரித்தனர். மரண வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சிவகங்கை எஸ்.பி., இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதிகள்: எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது. இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து விவாதங்களை கேட்ட நீதிபதிகள் காலையில் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை அறிக்கையை திருப்புவனம் மாஜிஸ்திரேட், பிரேத பரிசோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் மாலை 3:00 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மாலை 3:00 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

மாஜிஸ்திரேட், டீன் தரப்பில் மாலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் நீதிபதிகள் விசாரித்த போது, அரசு தரப்பு கூறியதாவது:

நகையை இழந்த பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் உறவினர் அல்ல. அந்த அதிகாரியின் அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் விசாரித்தனர் என்பதும் தவறு. அஜித்குமார் மரணம் தொடர்பாக தனிப்படையின் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணை சரியான திசையில் செல்கிறது. சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசின் கொடூரம்


நீதிபதிகள்: அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர் மீது மிளகாய் பொடியை துாவியுள்ளனர். சாதாரணமாக கொலை செய்யும் நபர் கூட இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. சம்பவ இடத்திலிருந்து சான்றாவணங்களை சேகரிக்கவில்லை. ஆரம்பகட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வகத்திலிருந்து அறிக்கை கிடைத்த பின், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


போலீஸ் விசாரணையில் அஜித்குமார் இறந்தது குறித்து, மதுரை நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும். அவரிடம் வழக்கு ஆவணங்கள், கோவில் மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் சம்பவத்தின் போது பதிவான வீடியோ பதிவுகளை, சிவகங்கை எஸ்.பி.,- திருப்புவனம் இன்ஸ்பெக்டர் இன்று ஒப்படைக்க வேண்டும். நீதிபதி, வரும் 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை பாதுகாக்க வேண்டும். காவலில் மரணம் தொடர்பாக அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேல் நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு தரப்பில், வரும் 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் வாயிலாக, போலீஸ் பிடியில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்ததற்கு, அரசே பொறுப்பு என்பதை நீதிபதிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்

 


முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:அஜித்குமார் மரணத்திற்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பதை அறிந்ததும், நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இது யாராலும் நியாயப்படுத்த முடியாத, காரணம் சொல்லி தப்பிக்க முடியாத செயல். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணையை தொடரலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது. இதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றுமாறு, நான் உத்தரவிட்டுள்ளேன்.

சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும். காவல் துறையினர் தங்களது விசாரணையின் போது, மனித உரிமையை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

இதுபோன்ற மீறல் சம்பவங்களை, நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல், எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

 


அஜித்குமார் உடலை தகனம் செய்த போது, அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி, அதன்பின் தீ வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

பொதுவாக உடல் தகனத்தின் போது, கற்பூரம் வைப்பர்; பெட்ரோல் ஊற்றுவதில்லை. ஆனால், அஜித்குமார் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதால், வேகமாக உடலை எரித்து விட வேண்டும் என்பதற்காக, போலீசாரின் நெருக்கடி காரணமாக, பெட்ரோல் ஊற்றப்பட்டதா என்ற சந்தேகம், பொதுமக்களிடம் ஏற்பட்டுஉள்ளது.

ஆணையத்தில் புகார்


'அஜித்குமாரை விசாரிக்க, எந்த சட்ட நடைமுறையையும் போலீசார் பின்பற்றவில்லை, நீதிபதி முன் ஆஜர்படுத்தவில்லை. அஜித்குமாரின் குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர். உடலை பெற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

'எனவே, 1993ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, அஜித்குமார் உயிரிழந்தது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.

'இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு புகார் அளித்துள்ளார்.

வீடியோ எடுத்தவருக்கு பாதுகாப்பு?


மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமாரை, கம்புகளால் போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் சுற்றி நின்று அஜித்குமாரை தாக்கும் காட்சிகள், அதில் இடம் பெற்றுள்ளன. இதை ஜன்னல் வழியாக ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ எடுத்தவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வீடியோ வெளியிட்டவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

எஸ்.பி., மாற்றம்


சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நேற்று, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவரது பொறுப்பை, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் கூடுதலாக கவனிப்பார் என, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்