சிசுக்கள் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்: மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சியில் அதிர்ச்சி

2 ஆடி 2025 புதன் 05:29 | பார்வைகள் : 177
பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக் துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர். இதனால், மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பில் நடந்து வருகின்றன.
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய, மூன்று மாதத்துக்கு முன், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை துவக்கினர். குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே, பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவசெல்வக்குமார் கூறியதாவது: கோவை வேடப்பட்டி பகுதியில், 350 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் உடலில், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு தாக்கம் உள்ளதா என ஆய்வு செய்தோம். ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம்.
பூச்சிக்கொல்லி தாக்கம் ரத்தத்தில் உள்ள விவசாயிகளின் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து காணப்படுவதையும் உறுதி செய்தோம். பூச்சிக்கொல்லி பாதிப்பு ரத்தத்தில் இருப்பதால், புற்றுநோய், சர்க்கரை பாதிப்பு உள்ளிட்ட பல வியாதிகள் வர வாய்ப்புண்டு. அந்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்; ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக, குழந்தைகளின் நஞ்சுக்கொடியை ஆய்வு மேற்கொள்ளும் பணியை, மூன்று மாதத்துக்கு முன் துவக்கினோம். எல்.இ.எம்.எஸ்., என்ற கருவி உதவியுடன் ஆய்வு செய்ததில், நுண்துகள் இருப்பதை கண்டுள்ளோம். ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் உள்ளது; தற்போது எவ்வித முடிவும் தர இயலாது.
நஞ்சுக்கொடியை தொடர்ந்து ஆய்வு செய்து, பிளாஸ்டிக் நுண்துகள் அதிகமுள்ள குழந்தைகளின் பிறப்பு, அதன் எடை, வேறு பிரச்னைகள் உள்ளதா என்பதையும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம்.கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது 'மாஸ்க்' அணிவது, சரிவிகித ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.