கடல்வழி சுற்றுலா பயணியர் வருகை 10 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு

1 ஆடி 2025 செவ்வாய் 14:47 | பார்வைகள் : 133
இந்தியாவில் கப்பல் சுற்றுலா பயணியர் வருகையை, வரும் 2029ம் ஆண்டுக்குள், 10 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.
இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த, 'குரூஸ் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, ஆசிய நாடுகளுடன் இந்திய சுற்றுலா கப்பல் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான இரண்டு நாட்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று துவங்கியது.
இதை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், சென்னை துறைமுகத்தில், நான்கு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின், அமைச்சர் சர்பானந்தா அளித்த பேட்டி:
ஆசிய - இந்தியா கப்பல் போக்குவரத்து கலந்துரையாடல் கூட்டம், இந்தியாவில் இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது.
இதில் கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து தொடர்புடைய பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் வாயிலாக, இந்தியாவில் கப்பல் போக்குவரத்து மேம்படும்.
சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் முனையம், தற்போது 1,500 பயணியரை கையாளும் வகையில் உள்ளது. இது, 3,000 பேரை கையாளும் வகையில், 19.25 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளது.
அதே போன்று, இங்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களை கையாளுவதற்கான நடைபாதை சேமிப்பு மையம், 36.91 கோடி ரூபாயில், 9.90 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட உள்ளது. கப்பல் பணியாளர்களின் நலன் மற்றும் வசதிக்காக செயல்பட்டு வரும் கிளப், 5.10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளது.
சென்னை துறைமுகத்தில் உள்ள, 100 ஆண்டுகள் பழமையான, 'ஹைட்ராலிக் பவர்' கட்டடத்தை நினைவுச்சின்னமாக மாற்றி, கடல்சார் வரலாற்றை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது.
அதற்காக அந்த கட்டடம், 5.25 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்த புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வரை, கப்பல் போக்குவரத்தை பயன்படுத்திய பயணியர் எண்ணிக்கை வெறும், 84,000 இருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில், கப்பல், துறைமுகம், நீர்வழி போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களால், இந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர்ந்துள்ளது.
வரும் 2029ம் ஆண்டுக்குள் கப்பல் போக்குவரத்து வாயிலாக, சுற்றுலா பயணியர் வருகையை 10 லட்சமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். 2030க்குள், உலகின் முதல் 10 கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றாகவும், 2047க்குள் உலகின் முதல் ஐந்து கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றாகவும் இந்தியா மாறும். இவ்வாறு அவர் கூறினார்.