Paristamil Navigation Paristamil advert login

இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளில் 10 மடங்கு உயரும்

இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளில் 10 மடங்கு உயரும்

1 ஆடி 2025 செவ்வாய் 06:47 | பார்வைகள் : 143


இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள், 10 மடங்காக உயரும்,” என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தெற்கு பிராந்திய மாநாடு, புதுச்சேரி பல்கலையில் நேற்று நடந்தது. கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பணியாளர் மற்றும் பொது குறைகள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், டிஜிட்டல் இந்தியாவில் குடிமக்களை மேம்படுத்துதல், நிர்வாகம், மேலாண்மை மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசியதாவது:

மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் துவக்கிய பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால், நாடு வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், மக்களின் சமூக கண்ணோட்டமும் மாறியுள்ளது. கொரோனா காலத்திற்கு பின், நாட்டில் டிஜிட்டல் துறையில் ஏற்பட்ட மாற்றம் அளப்பரியது. நம் விண்வெளி பொருளாதாரம் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண உள்ளது. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது, 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதுடன், உலகின் முக்கிய இடத்தை பிடித்துள்ளது; பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 10 மடங்கு வளர்ச்சியை காணும். வளர்ந்த நாட்டை நோக்கிய நம் நாட்டின் பயணத்தில் முக்கிய மைல்கல் இது. ஆராயப்படாதவற்றை, நாடு எவ்வாறு சிறப்பாக ஆராய முடிந்தது என்பதுதான் விண்வெளி பொருளாதாரத்தின் சிறப்பு. இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்