Paristamil Navigation Paristamil advert login

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை நீக்க காங்கிரஸ் ஆலோசனை?

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை நீக்க காங்கிரஸ் ஆலோசனை?

1 ஆடி 2025 செவ்வாய் 05:47 | பார்வைகள் : 156


கர்நாடகாவில் நவம்பர் மாதத்தில் முதல்வர் மாற்றம் நடக்கும் என்ற பேச்சு அடிபடும் நிலையில், சித்தராமையாவை மாற்றலாமா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் மேலிடம் கருத்து கேட்க ஆரம்பித்து உள்ளது. பெங்களூரு வந்துள்ள அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை நேற்று, 30 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். முன்னதாக, சித்தராமையாவை மாற்றும்படி சுர்ஜேவாலாவிடம் வலியுறுத்துங்கள்' என, தன் ஆதரவாளர்களுக்கு துணை முதல்வர் சிவகுமார் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் பரவியதால், மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இங்கு, 2023 சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றதும் முதல்வர் பதவிக்கு சித்தராமையா, மாநில காங்., தலைவரான சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. மேலிடம் தலையிட்டு, 'ஆளுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி' என, சமரசம் செய்து வைத்தது. அதன்படி, வரும் நவம்பரில் முதல்வர் பதவியை சித்தராமையா விட்டுக் கொடுக்க வேண்டும்.

இதற்கிடையில், ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த மே மாதம் பிரமாண்ட சாதனை மாநாடு நடத்தப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். 'இந்த மாநாட்டால் தன் இமேஜ் அதிகரிக்கும். ஐந்து ஆண்டுகளும் முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம்' என்று, சித்தராமையா நினைத்திருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு தலைகீழாக மாறியுள்ளது. மாநிலத்தில் முதல்வரை மாற்றுவதற்கான முன்னேற்பாடுகளை, காங்கிரஸ் மேலிடம் துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், திடீரென முதல்வரை மாற்ற முடியாது. அதற்கு எம்.எல்.ஏ.,க்களின் ஒப்புதல் அவசியம் என்பதால், அவர்களின் நாடித்துடிப்பை தெரிந்துகொள்ள, காங்., மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, கட்சி மேலிடம் பெங்களூரு அனுப்பி வைத்துள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவர், நேற்று முதல் எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் நோக்கமே, முதல்வர் மாற்றம் குறித்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை கேட்டறிவதே என்று கூறப்படுகிறது.

இதையறிந்து, உற்சாகமாகியுள்ள துணை முதல்வர் சிவகுமார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று மட்டும் மேலிடப் பொறுப்பாளரை, 30 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். முன்னதாக அனைவரிடமும் மொபைல் போனில் பேசிய சிவகுமார், 'மேலிடப் பொறுப்பாளர் உங்களுடன் நேருக்கு நேர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். அவரை சந்தித்து, உங்களுக்கு எதுவும் பிரச்னை இருந்தால் சொல்லுங்கள்' என, கூறியுள்ளார்.

மேலும், 'சித்தராமையாவை மாற்றும்படி மேலிடத்திடம் கேளுங்கள்' என, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு சிவகுமார் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'சித்தராமையாவை மாற்றி விட்டு, சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என, வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரில் நேற்று பேட்டி அளித்தபோது, ''மாநிலத்தின் தலைமை மாற்றம் குறித்து மேலிடம் முடிவு செய்யும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம், கட்சி மேலிடத்திடம் மட்டுமே உள்ளது. மேலிடத்தின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்,'' என்றார். கார்கேவின் இந்த பேட்டியும், முதல்வர் மாற்றம் நடக்கும் என்பதை உறுதிப்படுத்துவது போல இருப்பதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்