Paristamil Navigation Paristamil advert login

வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்

வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்

19 ஆடி 2025 சனி 07:52 | பார்வைகள் : 163


குடும்ப அரசியலை விமர்சித்து விட்டு வந்த நான், தற்போது வாரிசு அரசியல் என்ற பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

விழுப்புரம், ஆனந்தா மண்டபத்தில் ம.தி.மு.க., மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் கால கட்டங்களில் ம.தி.மு.க., செத்துவிட்டதென ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதங்கள் நடக்கிறது. ஆனால், கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதனை பொய்யாக்கி, 31 ஆண்டுகளாக காத்து வருகின்றனர்.

நீண்டகாலமாகவே துரோகங்கள் என்னை தொடர்ந்துகொண்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக்கிய செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் துரோகம் செய்து விலகினர்.

இடையே, செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்றோர், பல லட்சம் சன்மானம் பெற்றுக்கொண்டு, ம.தி.மு.க.,வினரை உடைத்து தி.மு.க.,வில் சேர்க்க முயன்றனர்.

பல லட்சம் பணத்தாசை காட்டி அழைத்ததோடு பொதுக்குழுவையும் கூட்டினர். ஆனால், 65 பேர் தான் அங்கு சென்றனர். 1,255 பொதுக்குழு உறுப்பினர்கள் என்னுடன் இருந்து இந்த கட்சியை காப்பாற்றினர். நம்மிடமிருந்த அவைத் தலைவர் ஒருவர் ரூ. 350 கோடி சொத்தை அபகரித்துக்கொண்டு துரோகம் செய்து விலகினார்.

நான் சிறையில் வாடியதையும் விமர்சித்து, அவதுாறு பரப்பினார். இதுபோன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவரை (மல்லை சத்யா) துரோகி என்று தான் சொல்ல வேண்டும்.வெளிநாட்டில் இருந்துகொண்டு என்னை விமர்சித்தவர்களுடன் தொடர்பு வைத்து, அதனை மறுக்காமல் உள்ள ஒருவரை தான் துரோகி என்கிறேன்.

கடந்த 3 ஆண்டுகளாக அந்த நபர், வெளிநாடுகளுக்கும் ரகசியமாக சென்று பலரிடம் தொடர்பும் வைத்துள்ளார். அந்த பயணம் குறித்து எந்த தகவலும் சொல்வதில்லை. பல தீய சக்திகளின் பின் புலத்துடன், கட்சியை முடக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை நான் அறிந்தேன்.என் மீதே பழிசுமத்திவிட்டு வேறு கட்சிக்கும் போக திட்டமிட்டிருந்ததும் தெரிகிறது. கட்சியிலிருந்து அவரை நீக்க சொன்னார்கள், ஆனால் அதனை நான் செய்யவில்லை.

எனது மகன் துரை, கட்சிக்கு வரக்கூடாது என்று, நான் கூறி வந்தேன். கட்சி நிர்வாகிகள் தான், துரை கட்சிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி, அதற்கான வாக்கெடுப்பும் நடத்தினர். அதில் ஓட்டு போட்ட 106 பேரில், 104 பேர் வரவேற்றனர்.

இந்த சூழலில் தான், துரை கட்சிக்கு வந்தார். ஆனால், வாரிசு அரசியல் என்ற பழிசொல்லிற்கு நான் ஆளாகி நிற்கிறேன். குடும்ப அரசியலை விமர்சித்துவிட்டு வந்த வைகோ, இப்போது தவிப்பில் இருக்கிறேன். தி.மு.க.,விற்கு 32 ஆண்டுகள் உழைத்தேன். கொலை பழிசுமத்தி துாக்கி எறியப்பட்டேன். புதிய கட்சி தொடங்க நான் விரும்பவில்லை. அதற்கான சூழல் அமைந்துவிட்டது.

பல துரோகங்களை கடந்து, ம.தி.மு.க.,வை காத்து வருகிறேன். தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். கட்சியினர், செப். 15ம் தேதி நடக்கும் திருச்சி மாநாட்டில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்