Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதிய கம்யூ.,க்கள்: இ.பி.எஸ்., சாடல்

தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதிய கம்யூ.,க்கள்: இ.பி.எஸ்., சாடல்

19 ஆடி 2025 சனி 06:50 | பார்வைகள் : 135


கூட்டணியில் அங்கம் வகிப்பதால், தி.மு.க.,வுக்கு கம்யூ., கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன. தி.மு.க.,விடம் பணம் வாங்கியதால், மக்கள் பிரச்னையை கூட அக்கட்சிகள் வெளியே கொண்டு வர முடியவில்லை, '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க., வெற்றி பெறும் என்று கனவு கண்டு கொண்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். இது குறித்து உதயநிதியிடம் கேட்ட போது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தி.மு.க., மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது. இதனால் தான் மக்களிடம் ஏதோதோ பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிட்டு குழப்பும் காட்சிகளை பார்க்கிறோம்.

தி.மு.க., உறுப்பினர்களும் குறைந்துவிட்டனர். இதனால் ஓரணியில் தமிழ்நாடு என வீடு வீடாக வந்து உங்களை சந்திக்கின்றனர். அவர்களிடம் ஏமாறாதீர்கள். தி.மு.க.,வின் நிலை பரிதாப நிலைக்கு வந்துவிட்டது. கட்சியில் சேருங்கள் என்று கெஞ்சும் நிலை வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்றதில் இருந்து மெல்ல மெல்ல அக்கட்சி மெலிந்து நலிவடைந்து, உறுப்பினர்களை சேர்க்கும் அளவுக்கு தாழ்ந்து போகியுள்ளது.

நானம் ஒரு விவசாயி. நானும் உங்களுக்கு துணை நிற்பேன்.விவசாயிகள் பாதிக்கப்படும்போதும் எல்லாம் நேசக்கரம் நீட்டும் அரசு அதிமுக அரசு.விவசாயிகள் துன்படும் போது எல்லாம் அ.தி.மு.க., அரசு துணை நின்றது.விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு திமுக அரசு.

இங்கு கம்யூ., கட்சி ஜால்ரா போடுகிறது. தி.மு.க., தவறுக்கு கம்யூ., கட்சிகள் உடந்தையாக இருக்கின்றன. கம்யூ., கட்சிகளுக்கு தனித்தன்மை இருந்தது. மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் கொடி பிடித்து போராடக்கூடிய கம்யூ., இயக்கங்கள் இன்று தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டன.

நான் சொல்லக்கூடாது. சொல்ல வைக்கிறார் இங்குள்ள கம்யூ., தலைவர். நீங்கள் என்று கைநீட்டி தி.மு.க.,விடம் பணம் வாங்குனீர்களோ அன்றைக்கே உங்கள் கட்சி முடிந்துவிட்டது. நீங்கள் மறைக்க முடியாது. மறைத்துபேச முடியாது. இதனை எவ்வளவு பணம் கொடுத்தோம் என தி.மு.க., வெளிப்படுத்திவிட்டது. பணம் வாங்கிய காரணத்தினால், மக்கள் பிரச்னைகள் கூட வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இனிமேல் எப்படி நம்புவார்கள். தி.மு.க.,வை எதிர்த்து அ.தி.மு.க., மட்டுமே போராடி கொண்டு உள்ளது.

விவசாயிகளுக்கு உதவி செய்கிறர்களா? கிடையாது.கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். அதற்காக போராடினீர்களா?போராடினால் சீட்டை குறைத்துவிடுவார்கள். அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் சீட்டை குறைத்துவிடுவார்கள்.

தயவு செய்து எண்ணிப்பாருங்கள். குறை சொல்வதாக நினைத்து விடாதீர்கள். இருக்கும் நிலையை சொல்கிறேன். கம்யூ., பேரியக்கம் ஒரு வரலாறு படைத்த இயக்கம். அதில் மாசுபட்டுவிடக்கூடாது என்பதால் சொல்கிறேன். நாங்கள் உங்களை குறைசொல்லி எங்கள் கட்சியை வளர்ப்பது கிடையாது.

இவ்வளவு பெரிய கட்சி மக்களுக்காக உழைத்த கட்சி, மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற கட்சி இன்று தேய்ந்துவிட்டது. கூட்டணியில் அங்கம் வகிப்பதால், தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டீர்களே? இது வேதனையாக உள்ளது.மக்கள் பிரச்னை வந்தால் குரல் கொடுக்க வேண்டும். அதற்காக கட்சி வைத்துள்ளோம்.

இந்த ஆட்சியில் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. டாஸ்மாக் ஊழல் நடக்கிறது. தினமும் ரூ.15 கோடி டாஸ்மாக் கடையில் இருந்து மேலிடத்துக்கு செல்வதாக சொல்கின்றனர். இப்படி பல ஆயிரக்கணக்கான கோடியை கொள்ளையடித்தது தான் இந்த ஆட்சியின் சாதனை. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்